கடந்த மே 3-ம் தேதி நடந்த நீட் தேர்வில் 80 சதவீதத்திற்கும் அதிகமான வினாக்கள் முன்கூட்டியே கசிந்துள்ளதாகப் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். ராஜஸ்தானில் இது தொடர்பாகப் போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளதைச் சுட்டிக்காட்டிய அவர், கைகளால் எழுதப்பட்ட 410 வினாக்கள் கொண்ட ஆவணம் தேர்வுக்கு 15 முதல் 30 நாட்களுக்கு முன்பே மாணவர்களிடம் பரவியதாகக் கூறியுள்ளார்.

அந்த வினாக்களைப் படித்தாலே 720-க்கு 600 மதிப்பெண்கள் எடுக்க முடியும் என ராஜஸ்தான் காவல்துறை கூறியுள்ள நிலையில், தேசியத் தேர்வு முகமை (NTA) இந்த முறைகேடுகளை மூடி மறைக்க முயற்சிப்பதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார். தமிழகத்தில் நீட் தேர்வு மையங்களில் மாணவ, மாணவிகளைச் சோதனை என்ற பெயரில் என்டிஏ கொடுமைப்படுத்துவதாகவும், ஆனால் வினாத்தாளைப் பாதுகாப்பதில் மட்டும் தொடர்ந்து தோல்வியடைந்து வருவதாகவும் அன்புமணி ராமதாஸ் விமர்சித்துள்ளார்.

ஒவ்வொரு ஆண்டும் வினாத்தாள் கசிவு, ஆள்மாறாட்டம் என முறைகேடுகள் வழக்கமாகிவிட்டதாகவும், இது தகுதியான ஏழை மாணவர்களின் மருத்துவக் கனவைச் சிதைப்பதாகவும் அவர் வேதனை தெரிவித்துள்ளார். தனியார் பல்கலைக்கழகங்களின் மருத்துவ இடங்கள் விற்பனை செய்யப்படுவதைத் தடுப்பதே நீட் தேர்வின் நோக்கம் எனக் கூறப்பட்டாலும், கடந்த 9 ஆண்டுகளில் அந்த நோக்கம் நிறைவேற்றப்படவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

​நீட் தேர்வு என்பது தற்போது ஆண்டுக்கு 1 லட்சம் கோடி ரூபாய் வருவாய் ஈட்டித் தரும் ஒரு பெரும் வணிகமாக மாறிவிட்டதாகவும், இதன் காரணமாக மாணவர்களின் தற்கொலைகள் அதிகரித்து வருவதாகவும் அவர் கவலை தெரிவித்துள்ளார். யாருக்கும் பயனளிக்காத, எதிர்மறையான விளைவுகளை மட்டுமே ஏற்படுத்தும் நீட் தேர்வை மத்திய அரசு நிரந்தரமாக ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

மேலும், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் வினாத்தாள் கசிந்தது குறித்து சிபிஐ விசாரணை நடத்தி, முறைகேட்டிற்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் தனது அறிக்கையில் கேட்டுக்கொண்டுள்ளார்.