நடிகர் விஜய் கலந்து கொள்ளும் திரைப்பட இசை வெளியீட்டு விழாக்கள் எப்போதுமே ரசிகர்களிடையே தனி கவனம் பெறும். அதிலும், அவரது கடைசி படம் என கூறப்படும் ஜனநாயகன் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா என்பதால், இந்த நிகழ்ச்சி ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.

மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் உள்ள புக்கட் ஜலீல் மைதானத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்ற இந்த இசை வெளியீட்டு விழாவில், நடிகர் விஜய் பகிர்ந்துகொண்ட ஒரு ‘குட்டி ஸ்டோரி’ அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. அந்தக் கதையில், ஒரு ஆட்டோ ஓட்டுநர் கர்ப்பிணிப் பெண்ணை மழையில் ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் செல்கிறார். மழை அதிகமாக இருந்ததால், அவர் தன்னிடம் இருந்த குடையை அந்தப் பெண்ணிடம் கொடுத்து, “யாருக்காவது தேவைப்பட்டால் கொடுத்துவிடுங்கள்” என்று கூறிச் செல்கிறார்.

ஆஸ்பத்திரி வாசலில் மழையில் நனைந்தபடி நின்றிருந்த ஒரு பெரியவரை கண்ட அந்தப் பெண், அவரிடம் அந்தக் குடையை வழங்குகிறார். அந்த பெரியவரும், “யாருக்காவது தேவைப்பட்டால் கொடுத்துவிடுங்கள்” என்று கூறி, அந்தக் குடையை மற்றொருவரிடம் கொடுக்கிறார். இவ்வாறு அந்தக் குடை பலரிடமும் கைமாறி, இறுதியில் மழையில் நனைந்தபடி வீட்டுக்கு ஓடி வரும் ஒரு பள்ளி மாணவியிடம் வந்து சேர்கிறது.

அந்த மாணவியைப் பார்த்து பதற்றமடைந்து வீட்டு வாசலில் காத்திருந்தவர் வேறு யாருமில்லை; ஆரம்பத்தில் கர்ப்பிணிப் பெண்ணுக்கு குடை கொடுத்த ஆட்டோ ஓட்டுநரே. அவர் கொடுத்த குடை, சுற்றி வந்து மீண்டும் அவரிடமே வந்தது.

இந்தக் கதையின் மூலம், “முடிந்தவரை நல்லது செய்யுங்கள். சிறிய உதவிகளே வாழ்க்கையை அழகாக்கும்” என்ற கருத்தை நடிகர் விஜய் வலியுறுத்தினார். அவரது இந்த ‘குட்டி ஸ்டோரி’ ரசிகர்களிடையே சமூக வலைதளங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது.