நடிகர் விஜய் நடித்துள்ள ஜனநாயகன் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா, மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் உள்ள புக்கிட் ஜலில் மைதானத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த விழாவில் பங்கேற்பதற்காக நடிகர் விஜய் தனி விமானம் மூலம் மலேசியா சென்றடைந்தார்.
இந்த நிகழ்ச்சியில் 80 ஆயிரம் ரசிகர்கள் பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டிருந்தது. விழாவில் அரசியல் சார்ந்த கருத்துகளை பேசக்கூடாது என்ற கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டிருந்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டது.
இசை வெளியீட்டு விழா மாலை 6 மணிக்கு தொடங்கவிருந்த நிலையில், பகல் 1 மணி முதலே விஜய் ரசிகர்கள் மைதானம் முன்பு திரளத் தொடங்கினர். ரசிகர்கள் மேள தாளங்கள் முழங்க உற்சாகமாக நடனமாடி விழாவை கொண்டாடினர். விழாவிற்கு முன்னதாக, விஜய் நடித்த திரைப்பட பாடல்களை மையமாக வைத்து ‘தளபதி திருவிழா’ என்ற பெயரில் சிறப்பு இசை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பாடகர்கள் எஸ்.பி.பி. சரண், விஜய் யேசுதாஸ், அனுராதா ஸ்ரீராம், ஹரிஷ் ராகவேந்திரா, சைந்தவி, திப்பு உள்ளிட்டோர் பங்கேற்று பாடல்களை பாடினர்.
மாலை 6.30 மணிக்கு மேல் விஜய் மைதானத்திற்குள் வந்தார். அங்கு அமைக்கப்பட்டிருந்த ரேம்ப் வாக் மேடையில் நடந்து சென்று ரசிகர்களை பார்த்து கையசைத்தார். விழாவில் விஜய்க்கு வெற்றிப் படங்களை வழங்கிய இயக்குநர்கள் அட்லி, லோகேஷ் கனகராஜ், நெல்சன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர். மேலும், ஜனநாயகன் படத்தில் நடித்துள்ள பூஜா ஹெக்டே, நரேன், நாசர், பிரியாமணி, இசையமைப்பாளர் அனிருத், நடிகை ஆண்ட்ரியா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
விழாவில் விஜய் பேசுகையில்,
“ஒரு சிறிய மணல் வீடு கட்டும் நம்பிக்கையுடன் நான் சினிமா துறைக்கு வந்தேன். ஆனால் நீங்கள் எனக்கு ஒரு அரண்மனையே கட்டிக் கொடுத்தீர்கள். என்னுடன் முதல் நாளிலிருந்து நின்றவர்கள் என் ரசிகர்கள்தான். கிட்டத்தட்ட 33 ஆண்டுகளாக என்னுடன் பயணித்து வருகிறார்கள். அடுத்த 30 ஆண்டுகளும் அவர்களுடன் நிற்க முடிவு செய்திருக்கிறேன்.
எனக்காக எல்லாவற்றையும் விட்டுக்கொடுத்த ரசிகர்களுக்காக, நான் சினிமாவையே விட்டுக்கொடுக்கிறேன். இந்த விஜய், சும்மா ‘நன்றி’ சொல்லிவிட்டு போக மாட்டான். நன்றிக்கடன் தீர்த்துவிட்டுத்தான் போவேன்” என்றார். மேலும், இசையமைப்பாளர் அனிருத்தை பாராட்டிய அவர்,
“அனிருத்தை ‘Musical Departmental Store’ என்று சொல்லலாம். உள்ளே போனால் என்ன வேண்டுமோ அதை எடுத்துக்கொள்ளலாம். அவர் என்னை ஒருபோதும் ஏமாற்றியதில்லை” எனக் கூறினார்.
வாழ்க்கை தத்துவம் குறித்தும் பேசிய விஜய்,
“வெற்றி பெற நண்பர்கள் அவசியம் இல்லாமல் போகலாம். ஆனால் ஒரு வலிமையான எதிராளி நிச்சயம் தேவை. அப்படிப்பட்ட எதிராளி இருந்தால் தான் நாமும் வலிமை பெற முடியும்” என்றார்.
அரசியல் தொடர்பான கேள்விகளுக்கு மறைமுகமாக பதிலளித்த அவர், “விஜய் தனியா வருவாரா, அணியா வருவாரா என்று கேட்கிறார்கள். 33 ஆண்டுகளாக நாம் அணியாகத்தான் வந்திருக்கிறோம். சஸ்பென்சில்தான் சுவாரஸ்யம் இருக்கும்” என்றார்.
தன் உரையின் இறுதியில்,
“2026-ல் வரலாறு மீண்டும் நிகழப்போகிறது. மக்களுக்காக அதை வரவேற்க நாம் தயாராக இருப்போம். நன்றி, மலேசியா” எனக் கூறினார். இந்த விழா, விஜய் ரசிகர்களிடையே பெரும் உணர்ச்சி எழுச்சியை ஏற்படுத்தியது.
