தமிழகம் முழுவதும் அரசின் ஆவின் நிறுவனத்தின் பால் விற்பனை நடைபெற்று வருகிறது. அதனைப் போலவே தனியார் நிறுவனங்களும் பால் விற்பனையில் ஈடுபட்டுள்ளன. பெரும்பாலும் ஹோட்டல்கள் மற்றும் டீக்கடைகளில் அதிக அளவு தனியார் பால்தான் பயன்படுத்தப்படுகிறது. ஆவின் பாலுக்கும் தனியார் பாலுக்கும் லிட்டருக்கு 20 ரூபாய் வரை வித்தியாசம் இருந்து வருவதால் ஆவின் பால் கடைகளில் உடனே விற்று தீர்ந்து விடுகிறது. இதனால் கடந்த ஆண்டு நான்கு முறை தனியார் பால் விலை உயர்த்தப்பட்டது.

இந்நிலையில் தற்போது பால் மற்றும் தயிர் ஆகியவற்றின் விலையை லிட்டருக்கு இரண்டு ரூபாய் உயர்த்தியுள்ளது. இந்த விலை உயர்வு தமிழக முழுவதும் நாளை முதல் அமலுக்கு வருகின்றது. இது தொடர்பாக தனியார் பால் நிறுவனங்கள் பால் முகவர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பி உள்ளன. பால் கொள்முதல் விலை மற்றும் உற்பத்தி மூலப்பொருட்களின் விலை ஏற்றம் காரணமாக பால் விலையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆவின் பால் விலையில் எந்த மாற்றமும் இருக்காது என்பது குறிப்பிடத்தக்கது.