தென்காசி மாவட்டம் ஊத்துமலை அருகே கீழக்கலங்கள் இந்திரா காலனி பகுதியில் நடராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கனகராஜ் (26) என்ற மகன் இருந்துள்ளார். இவர் கூலி தொழில் செய்து வரும் நிலையில் வழக்கம்போல் வேலைக்கு சென்று விட்டு நேற்று இரவு வீட்டின் முன் அமர்ந்திருந்தார். அப்போது திடீரென ஆயுதம் ஏந்திய மர்ம கும்பல் அங்கு வந்த நிலையில் அவர்களைப் பார்த்தவுடன் கனகராஜ் அங்கிருந்து தப்பி ஓடினார். இருப்பினும் அவரை விடாமல் அந்த கும்பல் ஓட ஓட விரட்டி சரமாரியாக அரிவாளால் வெட்டினர்.

அவருடைய அலறல் சத்தத்தை கேட்டு அவரின் தந்தை வெளியே வந்த போது அவரையும் மர்ம கும்பல் அரிவாளால் வெட்டினர். இதில் கனகராஜ் சம்பவ இடத்திலேயே இறந்த நிலையில், நடராஜன் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். இது குறித்த தகவலின் பேரில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து நடராஜனை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அதன்பிறகு கனகராஜ் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.