திருப்பூர் மாவட்டம் குடிமங்கலம் அருகே பணியாற்றி வந்த சிறப்பு உதவி காவல் ஆய்வாளர் (எஸ்எஸ்ஐ) சண்முகவேல் கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகமெங்கும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த கொலை வழக்கில் முக்கிய சந்தேக நபர்களான தந்தை மூர்த்தி மற்றும் மகன் தங்கபாண்டியன் ஆகியோர் தற்போது காவல்துறையிடம் சரணடைந்த நிலையில், போலீசார் இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பான விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது.
கடந்த இரவு, மடத்துக்குளம் பகுதியில் அதிமுக எம்.எல்.ஏ மகேந்திரனுக்கு சொந்தமான தோட்டத்தில் வேலை செய்து வந்த மூர்த்தி மற்றும் அவரது மகன் தங்கபாண்டியன் ஆகியோர் மது அருந்திய நிலையில் இடையிலான தகராறில் ஈடுபட்டுள்ளனர். இதைப் பார்த்த பொதுமக்கள் அவசர எண் 100-க்கு அழைத்தனர்.
தகவல் கிடைத்ததும், அப்பகுதியில் பணியில் இருந்த எஸ்எஸ்ஐ சண்முகவேல் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றார். தந்தை மூர்த்தியை ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்புவதற்காக முயற்சி செய்தபோது, தங்கபாண்டியன் மற்றும் மற்றொரு இளைஞர் மணிகண்டண் ஆகியோர் அரிவாளுடன் அவரை வெட்டி கொலை செய்தனர்.
இந்த தாக்குதலில் சண்முகவேல் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவருடன் பணியில் இருந்த ஆயுதப்படை காவலர் அழகுராஜ் படுகாயமடைந்த நிலையில் தப்பி சென்று போலீசாருக்கு தகவல் வழங்கினார். இந்தக் கொலை சம்பவம் மாநிலம் முழுவதும் அதிர்வலை ஏற்படுத்த, திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் ஆறு தனிப்படைகள் அமைக்கப்பட்டு குற்றவாளிகளை தேடும் பணி தொடங்கப்பட்டது.
இந்நிலையில், இன்று மூர்த்தி மற்றும் தங்கபாண்டியன் ஆகியோர் திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நேரில் சென்று சரணடைந்தனர். போலீசார் இருவரையும் உடனடியாக கைது செய்து, உடுமலைப்பேட்டை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். தற்போது மூன்றாவது முக்கிய சந்தேக நபரான மணிகண்டண் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
