பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் ராமதாஸ் மற்றும் செயல்தலைவர் அன்புமணிக்கு இடையே நிலவும் உள்தகராறு நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது.

இந்த நிலையில், கட்சியின் நிறுவனர் ராமதாஸ் அறிவித்திருக்கும் ஆகஸ்ட் 17ஆம் தேதியிலான பொதுக்குழு கூட்டத்துக்கு மாறாக, அன்புமணி தனது தலைமையில் ஆகஸ்ட் 9ஆம் தேதி மாமல்லபுரத்தில் பொதுக்குழு கூட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளார். இதனை எதிர்த்து, ராமதாஸ் ஆதரவு மாநில பொதுச்செயலாளர் முரளிசங்கர், அக்கூட்டத்துக்கு தடை விதிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுவை தாக்கல் செய்துள்ளார்.

தாக்கல் செய்யப்பட்ட மனுவில், 2022 மே மாதத்தில் பாமகவின் தலைவராக நியமிக்கப்பட்ட அன்புமணியின் பதவிக்காலம் 2024 மே 28 அன்று முடிவடைந்துவிட்டதாகவும், அதன் பிறகு கட்சியின் தலைவராக நிறுவனர் ராமதாஸ் தான் செயற்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, கட்சியின் விதிகளில் மாற்றங்கள் செய்யப்பட்டு, முக்கிய நிர்வாக அதிகாரங்கள் ராமதாஸிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும், கடந்த ஜூலை 7ஆம் தேதி நடைபெற்ற மாநில செயற்குழு கூட்டத்தில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், கட்சியின் அவசர பொதுக்குழு, செயற்குழு மற்றும் நிர்வாகக் கூட்டங்களை நடத்தும் அதிகாரம் கட்சியின் நிறுவனருக்கே உண்டு எனவும், அன்புமணி தற்போது தன்னைத்தானே தலைவர் என அறிமுகப்படுத்திக் கொண்டு, கட்சிக்குள் குழப்பம் மற்றும் அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் செயல்படுவதாகவும் மனுவில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. அவர் ராமதாஸின் அனுமதி இல்லாமல் 100 நாள் நடைபயணம் மேற்கொண்டு வருவதாகவும், இதுகுறித்து தமிழக டிஜிபியிடம் புகாரும் அளிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, அன்புமணி அறிவித்துள்ள மாமல்லபுரத்திலான ஆகஸ்ட் 9ஆம் தேதியிலான பொதுக்குழு கூட்டம், கட்சிக்குள் குழப்பத்தை உருவாக்கும் நோக்கத்தோடு நடத்தப்பட உள்ளது என்றும், இது சட்ட ஒழுங்கு பிரச்சனைகளையும் ஏற்படுத்தக்கூடும் என்பதால், அந்த கூட்டத்திற்கு நீதிமன்றம் தடை விதிக்க வேண்டும் என மாநில பொதுச்செயலாளர் முரளிசங்கர் தனது மனுவில் கோரிக்கை வைத்துள்ளார். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.