திருப்பூர் வீரராகவ பெருமாள் கோவில் வைகுண்ட ஏகாதசி விழாவின் போது, பாதுகாப்பு பணியில் இருந்த காவலரை வாலிபர் ஒருவர் கத்தியால் தாக்க முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் அரிசி கடை வீதியில் அமைந்துள்ள புகழ்பெற்ற வீரராகவ பெருமாள் கோவிலில், வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு  நேற்று  அதிகாலை சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர். கூட்டத்தை முறைப்படுத்தவும், அசம்பாவிதங்களைத் தவிர்க்கவும் திருப்பூர் தெற்கு காவல் நிலைய போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அங்கு வந்த போதை வாலிபர் ஒருவர், பணியில் இருந்த காவலர் ஒருவருடன் திடீரென வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். வாக்குவாதம் முற்றவே, தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து அந்த காவலரை அந்த வாலிபர் தாக்க முயன்றார். இதனால் அதிர்ச்சியடைந்த காவலர், அவரிடமிருந்து தப்பிக்க சிறிது தூரம் ஓடினார். பின்னர் சாதுர்யமாக செயல்பட்டு, தனது இடுப்பில் இருந்த சீருடை பெல்ட்டை கழற்றி, அதன் மூலம் வாலிபரின் கத்திக்குத்தை தடுத்து தன்னை தற்காத்துக்கொண்டார்.

 

இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த அங்கிருந்த மற்ற காவலர்கள் மற்றும் பொதுமக்கள், அந்த வாலிபரை உடனடியாகச் சுற்றி வளைத்துப் பிடித்தனர். தாக்குதலில் ஈடுபட்ட நபரைத் தெற்கு காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்ற போலீசார், அவர் யார்? எதற்காகக் காவலரைத் தாக்க முயன்றார்? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

காவலரை வாலிபர் கத்தியுடன் துரத்தும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருவதால், கோவில் வளாகத்தில் சிறிது நேரம் பதற்றமான சூழல் நிலவியது. தமிழகத்தில் அண்மைக்காலமாக காவலர்களுக்கே பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுவதாக எதிர்க்கட்சிகள் விமர்சித்து வரும் நிலையில், இந்தச் சம்பவம் அரசியல் வட்டாரத்திலும் கவனத்தைப் பெற்றுள்ளது.