காரைக்கால்: புதுச்சேரி மாநிலத்தின் காரைக்கால் மாவட்டம் வரிச்சிக்குடி பகுதியில் வசித்து வந்த ஹேமா என்ற இளம்பெண், தனது வாழ்க்கைத் துணையால் தொடர்ந்து கொடுமைப்படுத்தப்பட்டதாக கூறி தூக்குப்போட்டு தற்கொலை செய்துள்ள சம்பவம் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த செல்வமுத்துக்குமரனுக்கும் ஹேமாவுக்கும் கடந்த ஏப்ரல் மாதம் திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்குப் பிறகு இருவரும் பெங்களூரில் குடியிருந்தனர். ஆனால், சில மாதங்களிலேயே ஹேமா தனது குடும்பத்தினரிடம் கணவர் கூடுதல் வரதட்சனை கோரி அடிக்கடி கொடுமைப்படுத்துவதாகவும், நடத்தையில் சந்தேகமாக நடந்துகொள்வதாகவும் தெரிவித்துள்ளார். அதுமட்டுமல்லாது, ஆடையின்றி ஆபாச நடனமாடும்படி வற்புறுத்தியதாகவும் கூறி, கண்ணீருடன் மனம் திறந்துள்ளார்.
இந்த விவகாரத்தில் பெற்றோர் சட்ட நடவடிக்கைகள் எடுக்க முயற்சி செய்து அவரை சமாதானப்படுத்திய நிலையில், சமீபத்தில் ஆடி மாதம் தாய் வீட்டுக்கு வந்த ஹேமா தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த தற்கொலை செய்தியை அறிந்த ஹேமாவின் உறவினர்கள் ஆத்திரமடைந்து, அவரது கணவர் மற்றும் குடும்பத்தினரிடம் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி, சடலத்தை எடுத்துக்கொள்ள மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இளம்பெண்களின் பாதுகாப்பு, தற்கொலை போன்ற சம்பவங்களை தடுக்கும் விதமாக குடும்பங்களில் விழிப்புணர்வு உருவாக வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
