வருகிற 2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு திமுக பல்வேறு முன்னெடுப்புகளை செய்து வருகிறது. அந்த வகையில் ஓரணியில் தமிழ்நாடு என்ற பெயரில் வாக்குச்சாவடி தோறும் 30% வாக்காளர்களை திமுக உறுப்பினர்கள் சேர்க்கும் திட்டத்தை தொடங்கியது. கடந்த 1-ஆம் தேதி முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இந்த திட்டத்தை அறிமுகப்படுத்தினார். இதன் மூலம் திமுகவினர் தமிழகம் முழுவதும் வீடு வீடாக சென்று உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்தி உள்ளனர்.
அப்போது வாக்காளர்களின் தொலைபேசி எண் மூலம் ஒடிபி பெறப்பட்டு விபரங்கள் சேகரிக்கப்பட்டதால் திருப்புவனத்தைச் சேர்ந்த ராஜ்குமார் என்பவர் மதுரை ஹைகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அதில், ஓரணியில் தமிழ்நாடு என்ற பெயரில் உறுப்பினர் சேர்க்கை இயக்கம் நடந்து வருகிறது. அவர்கள் பொதுமக்களிடம் பல்வேறு ஆவணங்களை கேட்டு தொந்தரவு செய்கின்றனர்.
திமுகவினர் 10 பேர் எங்களது வீட்டிற்கு வந்து அனுமதி இல்லாமல் ஓரணியில் தமிழ்நாடு என முதலமைச்சர் படத்துடன் அச்சிடப்பட்ட சுவரொட்டியை வீட்டில் ஒட்டி சென்றனர். குடும்ப உறுப்பினர்களின் ஆதார் எண், வாக்காளர் அடையாள அட்டை, வங்கி கணக்கு உள்ளிட்ட அடையாள அட்டைகளை தர மறுத்தபோது வீட்டு பெண்கள் மாதந்தோறும் அரசிடம் பெற்று வரும் ஆயிரம் ரூபாய் உதவி தொகை நிறுத்தி விடுவோம் என மிரட்டுகின்றனர்.
திமுகவில் சேரவில்லை என்றால் அரசியல் பல்வேறு திட்டங்கள் நிறுத்தப்படும் என மிரட்டுகின்றனர். அரசியல் பிரச்சாரத்துக்காக ஆதார் உள்ளிட்ட தனிப்பட்ட தகவல்களை உபயோகப்படுத்துவது தவறானது. மேலும் அரசியலமைப்பு வழங்கும் சுதந்திர மற்றும் தனி உரிமை மீறும் செயல். எனவே இந்த நடவடிக்கைக்கு தடை விதிக்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் ஓடிபி எண்ணை எதற்காக கேட்கிறீர்கள்? ஓடிபி விவரங்களை பகிர வேண்டாம் என காவல்துறையினர் அறிவுறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்துகின்றனர். அப்படி இருக்கும்போது ஓடிபி எதற்காக கேட்கிறீர்கள் என கேள்வி எழுப்பி உள்ளனர். மேலும் ஆதார் விபரங்களை சேகரிக்கும் தனியார் நிறுவனங்கள் அமெரிக்க நிறுவனத்திற்கு இதை விற்பனை செய்தால் என்ன செய்வது?
தனது கட்சியின் உறுப்பினர் விபரங்களை கேட்பதில் தவறில்லை. ஆனால் அந்த விபரங்கள் எவ்வாறு கையாளப்படும்? எவ்வாறு பாதுகாக்கப்படும்? எவ்வாறு அழிக்கப்படும்? என்பது தொடர்பான எந்த விவரமும் உங்களிடமில்லை. மக்களின் தரவுகளை பாதுகாப்பது தொடர்பான தகவல் தொழில்நுட்ப பாதுகாப்பு விதிகள் இன்னமும் உருவாக்கப்படவில்லை என்பதால் இது மிகவும் ஆபத்தானது.
ஆகவே ஓரணியில் தமிழ்நாடு என்னும் பெயரில் உறுப்பினர் சேர்க்கையின் போது ஓடிபி யை பெற இடைக்கால தடை விதிக்கப்படுகிறது. உறுப்பினர் சேர்க்கையை நடத்தலாம் ஆனால் ஓடிபி விவரங்களை மக்களிடம் கேட்கக் கூடாது என கூறி இந்த வழக்கை ஒத்தி வைத்தனர்.
இந்த நிலையில் சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு இன்று விசாரணைக்கு வந்த நிலையில் திமுக சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அறிக்கை சமர்ப்பித்தார்.
அதில் பாஜக மற்றும் ஆம் ஆத்மி கட்சி போன்ற பிற கட்சிகள் செய்வதையே தாங்களும் செய்வதாக கூறியுள்ளார். மேலும் இந்த விஷயத்தில் எந்த தடையும் கோரப்படாததால் உயர்நீதிமன்றம் தவறாக உத்தரவை பிறப்பித்துள்ளது என வாதிட்டார்.
இதுகுறித்து நீதிபதிகள் கூறியதாவது, இந்த பிரச்சனை முக்கியத்துவம் வாய்ந்தது. முழு செயல் முறையும் சந்தேகத்திற்குரியது. நீதிமன்றம் குடிமக்களை பாதுகாக்க வேண்டும். நீங்கள் ஹைகோர்ட்டையே நாடுங்கள். இந்த விவகாரத்தில் நாங்கள் தலையிட விரும்பவில்லை என கூறி மனுவை தள்ளுபடி செய்தனர்.
