ஜார்க்கண்ட் மாநில முன்னாள் முதல்வரும், பழங்குடியினருக்கான உரிமைப் போராட்டத்தில் முக்கியக் குரலாக இருந்தவருமான ஷிபு சோரன், 81 வயதில் டெல்லியில் உள்ள சர் கங்காராம் மருத்துவமனையில் இன்று காலமானார்.
கடந்த சில வாரங்களாக உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று காலை அவரது மரணம் ஏற்பட்டது. அவரது மகனும் தற்போதைய ஜார்க்கண்ட் முதல்வருமான ஹேமந்த் சோரன், “இன்று நான் பூஜ்ஜியமாகிவிட்டேன்” என உருக்கமாக தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் ஜார்கண்ட் முன்னாள் முதல்வரும் பழங்குடி தலைவர்களில் ஒருவருமான சிபு சோரனின் மறைவிற்கு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது, சுரண்டலுக்கு எதிரான இடைவிடாத போராட்டம், சமூக நீதிக்கான அசைக்க முடியாத அர்ப்பணிப்பு ஆகியவற்றால் சிபு சோரனின் வாழ்க்கை வரையறுக்கப்பட்டது. பழங்குடி மக்களை அரசியல் சக்தியாக மாற்றிய புதிய மாநிலத்தை கட்டமைத்த மாபெரும் தலைவரை இழந்தது பேரிழப்பு என கூறியுள்ளார்.
