திமுக மற்றும் அதன் கூட்டணிக்கு எதிராக 2026 தேர்தலில் தோல்வி பயம் காரணமாக, பீகார் மாநிலத்தினரின் வாக்குரிமையை கேள்விக்குள்ளாக்கும் முயற்சி நடைபெறுகிறது என தமிழிசை சவுந்தரராஜன் குற்றம்சாட்டியுள்ளார்.
“இன்று 6 லட்சம் பீகாரிகள் தமிழ்நாட்டுக்கு வந்து ஓட்டு போடுகிறார்கள் அதைத் தடுக்கவேண்டும் என்று ஒரு முன்னாள் உள்துறை அமைச்சர் கூறியுள்ளார். இது பொய்யான தகவல். தேர்தல் ஆணையம் இதை கண்டித்துள்ளது,” என கூறிய அவர், மாநில எல்லையை தாண்டி இந்தியர்களுக்கு வாக்குரிமை இருக்கிறதென்றும் நினைவூட்டினார்.
“வேறு மாநிலத்தினர் தமிழ்நாட்டில் வேலை செய்யலாம். ஆனா அவர்களுக்கு இங்கு ஓட்டு போட முடியாதா? பிரியங்கா காந்தி ஒரு மாநிலத்திலிருந்து வந்து மற்ற மாநிலத்தில் தேர்தலில் போட்டியிட்டார். அதுபோல இவர்கள் ஓட்டு போடுவதில் என்ன தவறு?” எனக் கேள்வி எழுப்பிய தமிழிசை, தற்போது நடைபெறும் அரசியல் சூழலை தேர்தல் தோல்விக்கு முன்கூட்டியே காரணம் அமைக்கும் முயற்சி என கண்டனம் தெரிவித்தார். “6 லட்சம் பீகாரிகள் ஓட்டு போட்டதால் நாங்கள் தோற்றோம் என்பதற்கான கதையை சிதம்பரம் முதலாக உருவாக்கிக்கொண்டு இருக்கிறார்” எனவும் விமர்சித்தார்.
விவசாயிகளுக்கு இரவு வேளையில் பாம்பு கடி மற்றும் தேள் கடி போன்ற ஆபத்துகளைத் தவிர்க்க ₹7,000 முதல் ₹15,000 வரை மானியத்துடன் பாதுகாப்பு கருவி வழங்கிய திட்டத்தை தமிழக அரசு நிறுத்தியிருப்பது விவசாயிகளை கடும் பாதிப்புக்கு உள்ளாக்குவதாகவும் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார். அரசின் பல்வேறு துறைகளில் தோல்விகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் அவர் கூறினார்.
அதன்மீது, அறநிலையத்துறை தற்போது கார்ப்பரேட் நிறுவனமாக செயல்படுகிறது என்றும், எந்த திட்டமும் முழுமையாக நிறைவு செய்யப்படாமலேயே 3,000 குடமுழுக்கு விழாக்கள் நடத்தப்பட்டு வருவதாகவும் கூறினார். இதனைக் குறித்தும் சென்னை உயர்நீதிமன்றம் கடுமையாக விமர்சித்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
