தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான ஓய்வூதியத் திட்டங்கள் தொடர்பாக ஆய்வு மேற்கொண்ட ககன்தீப் சிங் பேடி தலைமையிலான குழு, தனது முழுமையான ஆய்வு அறிக்கையை முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் இன்று சமர்ப்பித்தது.

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான ஓய்வூதியத் திட்டங்களில் நிலவும் சிக்கல்கள் மற்றும் அவர்களது கோரிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளும் நோக்கில், தமிழக அரசு சார்பில் கூடுதல் தலைமைச் செயலாளர் ககன்தீப் சிங் பேடி தலைமையில் 3 அதிகாரிகள் கொண்ட குழு அமைக்கப்பட்டது.

இந்த குழுவானது, பழைய ஓய்வூதியத் திட்டம், பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் மற்றும்
ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் ஆகிய மூன்று திட்டங்களையும் விரிவாக ஆய்வு செய்துள்ளது.

மேலும், மாநில அரசின் நிதி நிலை மற்றும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் நீண்டநாள் கோரிக்கைகள் ஆகியவற்றையும் கருத்தில் கொண்டு, நடைமுறைப்படுத்தத்தக்க ஓய்வூதிய முறை குறித்த பரிந்துரைகளை அரசுக்கு இந்த குழு அளித்துள்ளது.

அரசுப் பணியாளர்களின் கருத்துகள் மற்றும் கோரிக்கைகளை முழுமையாக அறிந்து கொள்வதற்காக, இந்த குழு 194 அரசுப் பணியாளர் சங்கங்களுடன் 9 சுற்று ஆலோசனைக் கூட்டங்களை நடத்தியது. இதன் அடிப்படையில், கடந்த செப்டம்பர் 30ஆம் தேதி இடைக்கால அறிக்கை ஒன்றை அரசுக்கு சமர்ப்பித்திருந்தது.

அதன் தொடர்ச்சியாக, விரிவான ஆய்வுகளுக்குப் பிறகு தயாரிக்கப்பட்ட முழுமையான இறுதி அறிக்கை இன்று முதல்வரிடம் வழங்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கையின் அடிப்படையில், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான ஓய்வூதியத் திட்டம் தொடர்பாக தமிழக அரசு அடுத்த கட்ட நடவடிக்கைகளை எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.