வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை கண்டித்து, சென்னை எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகே நேற்று விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் தலைமையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில், எம்.பி. ரவிக்குமார், எம்.எல்.ஏ.க்கள் பனையூர் பாபு, ஆளூர் ஷானவாஸ், எஸ். எஸ். பாலாஜி, துணை பொதுச்செயலாளர் வன்னியரசு உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
ஆர்ப்பாட்டத்தின் போது, வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தத்திற்கு எதிராக போராட்டக்காரர்கள் கோஷங்களை எழுப்பினர்.
இதன்போது பேசுகையில், திருமாவளவன், “தமிழகத்தில் நடைபெறும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தால் ஒரு கோடி மக்கள் வாக்குரிமையை இழக்கும் அபாயம் உள்ளது. இத்திட்டத்தை மத்திய பா.ஜ.க. அரசு உள்நோக்கத்துடன் பயன்படுத்துகிறது” என குற்றஞ்சாட்டினார்.
ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற திருமாவளவனை வரவேற்க பல்வேறு பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன. அதில் ‘நாளைய முதல்வர்’, ‘மக்களின் முதல்வர்’, ‘களத்தில் முதல்வர்’, ‘சமகால முதல்வர்’ போன்ற வாசகங்கள் இடம்பெற்றிருந்தது. இந்த வாசகங்கள் அரசியல் வட்டாரத்தில் புதிய சர்ச்சையை எழுப்பியுள்ளது.
இதற்கு முன்னர், கடந்த ஜூலை மாதம் ராணிப்பேட்டையில் நடைபெற்ற கூட்டத்தில் பேசுகையில், “நான் முதல்-அமைச்சர் பதவிக்கு தகுதியில்லாதவரா? 25 ஆண்டுகள் தேர்தல் அரசியலில் உள்ளேன்” என்று திருமாவளவன் பேசியிருந்தார். அந்த கருத்து அவரது ஆதரவாளர்களால் உற்சாகமாக வரவேற்கப்பட்டது. இதையடுத்து, தி.மு.க. – விடுதலை சிறுத்தைகள் கட்சி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக பேசப்பட்டது.
