தமிழகத்தில் ஆட்சி அமைக்க தமிழக வெற்றிக் கழகத் தலைவர் சி. ஜோசப் விஜய்க்கு ஆளுநர் வாய்ப்பளிக்க வேண்டும் என்றும், குடியரசுத் தலைவர் ஆட்சியைத் திணிப்பதில் நியாயமில்லை என்றும் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் ஓமர் அப்துல்லா வலியுறுத்தியுள்ளார்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், தனிப்பெரும் கட்சியான தமிழக வெற்றிக் கழகத்திற்கு (தவெக) ஆட்சி அமைக்க உரிமை கோரியதை ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் நிராகரித்தார். போதிய பெரும்பான்மை இல்லை என ஆளுநர் மாளிகை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், ஸ்ரீநகரில் செய்தியாளர்களிடம் பேசிய ஜம்மு-காஷ்மீர் முதல்வர் ஓமர் அப்துல்லா இது குறித்துக் கூறியதாவது,  தேர்தலுக்குப் பிந்தைய சூழலில், தனிப்பெரும் கட்சியை ஆட்சி அமைக்க அழைப்பதும், பின்னர் சட்டப்பேரவையில் அவர்கள் பெரும்பான்மையை நிரூபிக்க வாய்ப்பளிப்பதும் தான் சரியான நடைமுறை என உச்ச நீதிமன்றம் பல தீர்ப்புகளில் தெளிவாகக் கூறியுள்ளது. எனவே, தமிழகத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த எந்தவித முகாந்திரமும் இல்லை.

முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் 13 நாட்கள் ஆட்சி அமைத்தபோது, அன்றைய குடியரசுத் தலைவர் அவரிடம் எண்களைக் கேட்கவில்லை. மாறாக, ஆட்சி அமைக்கவே முதலில் அழைப்பு விடுத்தார். பெரும்பான்மை இல்லாதபோது வாஜ்பாய் தானாகவே பதவி விலகினார். அதே போன்ற ஜனநாயக முறை இங்கும் பின்பற்றப்பட வேண்டும்.

தமிழக ஆளுநர் மாளிகை இந்த ஜனநாயக நடைமுறையைத் தடுப்பதில் நியாயமில்லை. திரு. விஜய் அவர்களை ஆட்சி அமைக்க அழைத்து, சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க வாய்ப்பு வழங்க வேண்டும். அவர் பெரும்பான்மையை நிரூபித்தால் ஆட்சியில் நீடிப்பார், இல்லையெனில் பதவி விலகுவார் என்றார்.