தமிழகத்தில் தனிப்பெரும் கட்சியான தவெக-வை ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் கூறி வருவது ஒரு கண்துடைப்பு நாடகம் என்று பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் விமர்சித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், “வெளித்தோற்றத்திற்கு விஜய்யை ஆதரிப்பது போன்ற ஒரு பிம்பத்தை உருவாக்கிவிட்டு, நிஜத்தில் அந்த ஆட்சி அமைய விடாமல் பின்னால் இருந்து முதலமைச்சர் ஸ்டாலின் பல முட்டுக்கட்டைகளைப் போட்டு வருகிறார்” என்று பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும், திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் விலகியிருப்பதைச் சுட்டிக்காட்டிய அவர், தங்களுக்குள் இருக்கும் உட்கட்சி மற்றும் கூட்டணிக் குழப்பங்களை மறைப்பதற்காக பாஜக மற்றும் ஆளுநரை நோக்கிப் பழி போடுவது அரசியல் முதிர்ச்சியற்ற செயல் என்று சாடியுள்ளார். தவெக-வுக்கு ஆளுநர் வாய்ப்பு வழங்கவில்லை என்று கூச்சல் போடுபவர்கள், ஜனநாயக முறைப்படி தேவையான பலத்தை நிரூபிக்கத் தயங்குவது ஏன் என்றும் தமிழிசை கேள்வி எழுப்பியுள்ளார்.
