தமிழக அரசு, மூத்த குடிமக்களின் நலனை கருத்தில் கொண்டு, உணவுப் பொருட்களை நேரடியாக வீடுகளுக்கே கொண்டு சேர்க்கும் தாயுமானவர் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. கடந்த மாதம் முதல்வர் மு.க. ஸ்டாலின் இந்த திட்டத்தைத் தொடங்கி வைத்ததையடுத்து, தற்போது மாநிலம் முழுவதும் மூத்த குடிமக்களுக்கு ரேஷன் பொருட்கள் வீடு தேடி வழங்கப்பட்டு வருகின்றன.
தமிழகத்தில் 2.20 கோடி ரேஷன் கார்டுகள் உள்ளன. இவற்றின் மூலம் 7.46 கோடி மக்களுக்கு உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. அந்தியோதயா கார்டு வைத்துள்ள குடும்பங்களுக்கு மாதம் 35 கிலோ அரிசி, பருப்பு, சீனி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்படுகின்றன. குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கையை அடிப்படையாக கொண்டு அரிசியின் அளவு மாற்றப்படும்.
இந்நிலையில், தாயுமானவர் திட்டத்தின் கீழ், வயதான குடிமக்கள் தனியாக வட்ட அலுவலகங்களை நாட வேண்டிய அவசியமில்லை. ஒவ்வொரு மாதமும் இரண்டாவது சனிக்கிழமையில் நடைபெறும் ரேஷன் கார்டு குறைதீர் முகாம்களில், வயதுச் சான்றிதழ் உள்ளிட்ட தேவையான ஆவணங்களைச் சமர்ப்பித்து இந்த திட்டத்தில் புதிய பயனாளிகளாக சேர முடியும்.
இத்துடன், இந்த முகாம்களில் பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்றம், மொபைல் எண் இணைப்பு உள்ளிட்ட சேவைகளும் வழங்கப்படுகின்றன. தற்போது, கண்டறியப்படாத பயனாளிகளை சேர்க்கும் பணியும் அதிகாரிகளால் தீவிரமாக மேற்கொள்ளப்படுகிறது. மேலும் பொதுமக்கள், தங்களது ரேஷன் கடை வட்டார அலுவலர்களிடம் தொடர்பு கொண்டு, தங்களது விவரங்களை புதுப்பித்து, தாயுமானவர் திட்டத்தின் கீழ் தங்களைப் பதிவு செய்து கொள்ளலாம்.
