நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், சென்னை கிண்டியில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த போது, நடிகர் விஜய்யை விமர்சித்தது தொடர்பாக எழுந்த கேள்விக்கு பதிலளித்தார்.

அப்போது பேசிய அவர், “திரைத்துறையின் உச்சத்தை விட்டுவிட்டு வந்தேன் என்று ஒருவர் கூறினால், அவரை யார் வரச் சொன்னது என்ற கேள்வி எழுகிறது. அரசியலுக்கு வருவது சேவைக்காகவே ஆக வேண்டும். தற்பெருமை பேசக் கூடாது” என்று தெரிவித்தார். தொடர்ந்து அவர் கூறியதாவது:

“விஜய் மற்றவர்களுக்கு தலைவராக இருந்தாலும்கூட, எனக்கு அவர் தம்பி. தம்பியாகவே பார்க்கிறேன். அதனால், ‘இப்படி பேசாதே’ என்று கூறும் பொறுப்பும் எனக்கு இருக்கிறது. எம்.ஜி.ஆர், அண்ணா போன்ற தலைவர்களை முன்வைத்து இந்த கோட்பாட்டை நாங்கள் முன்னெடுத்து வருகிறோம் என்பதை விஜய் கூற முடியுமா?” என்றார்.

மேலும், “நான் ஆட்சி மாற்றத்துக்காகவோ, ஆள் மாற்றத்துக்காகவோ அரசியலுக்கு வரவில்லை. அரசியலமைப்பை மாற்றவே வந்துள்ளேன். இங்கு கட்சி அரசியல், தேர்தல் அரசியல் மட்டுமே உள்ளது. மக்கள் அரசியல் இல்லை. செய்தி மற்றும் விளம்பர அரசியல் மட்டுமே நிலவுகிறது. அதனை மாற்றி, செயல் மற்றும் சேவை அரசியலை கொண்டு வர வேண்டும். அதற்காகவே நான் பாடுபடுகிறேன்” எனவும் தெரிவித்தார்.

“தவெக் இளைஞர்கள் இன்னும் பலம் பெற வேண்டும். அவர்கள் பக்குவம் பெற வேண்டிய கட்டத்தில் இருக்கிறார்கள்”. திமுகவை உருவாக்கியவர் அண்ணா. அதிமுகவை உருவாக்கியவர் எம்ஜிஆர். இவர்கள் இருவரையும் எடுத்து வருவதால் தான் விஜயை எதிர்க்கிறோம். அண்ணா யார் என்று அரை மணி நேரம் விஜயால் பேச முடியுமா. மேலும் 2026 தேர்தலில் கூட்டணிக்கு வாய்ப்பே இல்லை வேட்பாளர்களை அறிவித்து வருகிறோம் என்றார்.