தம்புள்ளையில் நடைபெற்ற இலங்கை ‘ஏ’ அணிக்கு எதிரான போட்டியில் இந்திய ‘ஏ’ அணி அதிர்ச்சி தோல்வியடைந்து, மைதானத்தில் பெரும் சர்ச்சை வெடித்த பின்னர் இந்திய வீரர்கள் சோகத்துடன் டிரெஸ்ஸிங் ரூமில் முடங்கினர். ரசிகர்கள் அனைவரும் கலைந்து சென்று, மைதான ஊழியர்களும் தங்கள் வேலைகளை முடித்த நள்ளிரவு நேரத்திலும், 70 வயதான முதியவர் ஒருவர் மிக அமைதியுடன் இந்திய வீரர் ஒருவருக்காகக் காத்திருந்தார்.

அவர் வேறு யாருமல்ல, கொழும்பில் இருந்து சுமார் 160 கிலோமீட்டர் தூரம் பயணித்து, இந்திய இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷியை நேரில் சந்திப்பதற்காகவே வந்திருந்த இலங்கையின் முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியின் கேப்டனும், அந்நாட்டின் மிக உயரிய கிரிக்கெட் ஜாம்பவானுமான அனுரா தென்னகூன் ஆவார். ​போட்டியில் ரன் ஏதும் எடுக்காமல் அவுட்டாகி, மைதானத்தில் எதிரணி வீரர்களுடன் ஏற்பட்ட வார்த்தை மோதலால் மிகுந்த சோர்வுடனும் சோகத்துடனும் டிரெஸ்ஸிங் ரூமை விட்டு வெளியே வந்த 15 வயது வைபவ் சூர்யவன்ஷி, தனக்காகக் காத்திருந்த இலங்கை ஜாம்பவானைக் கண்டதும் நெகிழ்ந்துபோய் அவரது காலில் விழுந்து ஆசி பெற்றார்.

வைபவ்வை உடனடியாகக் கட்டிப்பிடித்து அணைத்துக் கொண்ட அனுரா தென்னகூன், “நீ உன்னுடைய ஆட்டத்தில் மட்டும் கவனம் செலுத்து, சமூக வலைதளங்களில் உன்னைச் சுற்றி எழும் அவதூறுகளையும் வெளி உலகச் சத்தத்தையும் காது கொடுத்துக் கேட்காதே” என்று உருக்கமாக அறிவுறுத்தினார். ஐபிஎல் தொடரில் வைபவ் அடித்த சிக்ஸர்களைப் பார்த்து வியந்துபோய்த் தான் அவரை நேரில் பாராட்ட வந்ததாக அனுரா தென்னகூன் குறிப்பிட்ட இந்த நெகிழ்ச்சியான தருணம், தம்புள்ளை மைதானத்தில் நிலவிய அத்தனை வதந்திகளுக்கும் சர்ச்சைகளுக்கும் மத்தியில் ஒரு அமைதியான சுவாரசியத்தை ஏற்படுத்தியுள்ளது.