2026 உலகக்கோப்பை கால்பந்து தொடரின் தொடக்க ஆட்டத்திலேயே, மைதானத்தின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கும் வகையில் மெக்சிகோ ரசிகர் ஒருவர் வினோத அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். மெக்சிகோ மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான விறுவிறுப்பான தொடக்க ஆட்டம் மெக்சிகோவின் புகழ்பெற்ற ‘அஸ்டெகா’ மைதானத்தில் நடைபெற்றது. அப்போது, மைதானத்தின் கேலரியில் அமர்ந்திருந்த ரசிகர் ஒருவர், பார்ப்பதற்கு அச்சு அசலாக மொபைல் போன் போன்ற வடிவிலான ஒரு பிரத்யேக பாத்திரத்தில் மதுபானத்தை மறைத்து எடுத்து வந்து ரகசியமாக குடித்துள்ளார். இதுகுறித்த வீடியோ இணையத்தில் வெளியாகி, உலகக்கோப்பை போன்ற உயர்தர பாதுகாப்பு வளையத்தை அந்த ரசிகர் எப்படி ஏமாற்றினார் என்ற விவாதத்தை கிளப்பியுள்ளது.
🤣 bro snuck in a tequila during the match between Mexico vs Xeno, he did it through is mobile device pic.twitter.com/f5LqNCNrOj
— Ade (@debornair99) June 13, 2026
மெகா தொடரின் முதல் போட்டியிலேயே அரங்கேறியுள்ள இந்த சம்பவம், அஸ்டெகா மைதானத்தின் பாதுகாப்பு குறைபாடுகளை அப்பட்டமாக தோலுரித்துக் காட்டியுள்ளதாக கால்பந்து விமர்சகர்களும், ரசிகர்களும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். உலகக்கோப்பை தொடக்க விழா போன்ற அதீத பாதுகாப்பு உள்ள இடத்திற்குள், தீவிர சோதனை நடத்தப்பட்டிருந்தால் இதுபோன்ற தடை செய்யப்பட்ட பொருட்களை உள்ளே கொண்டு வருவதை எளிதாக தடுத்திருக்கலாம் என விளையாட்டு ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். இந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, சர்வதேச கால்பந்து கூட்டமைப்பின் (FIFA) கடுமையான விதிமுறைகள் மற்றும் மைதான நிர்வாகத்தின் பொறுப்புக்கூறல் குறித்து உலகளவில் புதிய சர்ச்சை வெடித்துள்ளதோடு, அடுத்தடுத்த போட்டிகளில் இதுபோன்ற தந்திரமான சவால்களை பாதுகாப்பு படையினர் எப்படி எதிர்கொள்ளப் போகிறார்கள் என்ற கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.
