தமிழகச் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகி, தமிழக வெற்றிக் கழகம் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள நிலையில், ஆட்சியமைப்பதில் கடும் முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளது. நள்ளிரவில் ஆளுநர் மாளிகையில் அரங்கேறிய அதிரடி திருப்பங்களால் தமிழக அரசியல் களம் உச்சகட்டப் பரபரப்பில் உள்ளது. சமீபத்தில் நடைபெற்ற தேர்தலில் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களில் வெற்றி பெற்றது. ஆட்சியமைக்க 118 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு தேவை என்ற நிலையில், காங்கிரஸ் (5), சி.பி.ஐ. (2), சி.பி.எம். (2) ஆகிய கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. இதன் மூலம் பலம் 117-ஆக உயர்ந்தது. விசிக-வின் ஆதரவு கிடைத்தால் எண்ணிக்கை 119-ஆக உயரும் என எதிர்பார்க்கப்பட்டது.

இருப்பினும், திருச்சி கிழக்கு தொகுதி ராஜினாமா மற்றும் சபாநாயகர் நியமனம் ஆகியவற்றால் தவெக-வின் பலம் மீண்டும் 117-ஆகக் குறையும் சூழல் உள்ளது. பெரும்பான்மையை நிரூபிக்க இன்னும் ஒரு எம்.எல்.ஏ.-வின் ஆதரவு கட்டாயமாகியுள்ளது.

இந்தச் சிக்கலான சூழலில், அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் நள்ளிரவில் ஆளுநரைச் சந்தித்துப் பேசினார். அ.ம.மு.க. சார்பில் மன்னார்குடி தொகுதியில் வெற்றி பெற்ற எஸ். காமராஜ், எடப்பாடி பழனிசாமிக்கே ஆதரவளிப்பதாகக் கடிதம் அளித்துள்ளதாக அவர் தெரிவித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய டி.டி.வி. தினகரன் அதிரடி குற்றச்சாட்டை முன்வைத்தார். தவெக தரப்பில் ஆளுநருக்கு வாட்ஸ்அப் மூலம் அனுப்பப்பட்ட கடிதம் போலியானது. எங்கள் கட்சி எம்.எல்.ஏ. காமராஜை காணவில்லை; அவர் விலை போயிருக்கலாம் என அஞ்சுகிறோம். விஜய் பதவி வெறியில் குதிரை பேரத்தில் ஈடுபடுகிறார்.

இதற்கிடையே, மாயமானதாகக் கூறப்பட்ட எம்.எல்.ஏ. காமராஜ் ஆளுநர் மாளிகைக்கு நேரில் வந்ததைத் தொடர்ந்து, தினகரன் மீண்டும் ஆளுநரைச் சந்தித்தார். அ.ம.மு.க.-வின் ஒரே எம்.எல்.ஏ.வான காமராஜ் தவெக-விற்கு ஆதரவு தெரிவித்தால், அது 100 சதவீத ஆதரவு எனக் கருதப்படும் என்பதால் கட்சித் தாவல் தடைச் சட்டம் செல்லாது. ஆனால், போலி கடிதம் மற்றும் குதிரை பேரம் என்ற புகார்கள் வலுத்தால், ஆளுநர் இதனை மத்திய அரசுக்கு அறிக்கையாக அனுப்ப வாய்ப்புள்ளது.

பெரும்பான்மையை நிரூபிக்க மே 10-ஆம் தேதி வரை மட்டுமே காலக்கெடு உள்ளது. அதற்குள் சுமுக முடிவு எட்டப்படாவிட்டால், தமிழகத்தில் குடியரசுத் தலைவர் (ஜனாதிபதி) ஆட்சி அமல்படுத்தப்படலாம். இது தொடக்கத்தில 6 மாத காலத்திற்கு அமலில் இருக்கும். தேவைப்பட்டால் 3 ஆண்டுகள் வரை நீட்டிக்க மத்திய அரசுக்கு அதிகாரம் உண்டு.

இன்னும் 48 மணிநேரமே எஞ்சியுள்ள நிலையில், விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் பெரும்பான்மையை நிரூபித்து அரியணையில் ஏறுமா? அல்லது தமிழகம் டெல்லியின் கட்டுப்பாட்டுக்குள் (ஜனாதிபதி ஆட்சி) செல்லுமா? என்பது நாளை மறுதினத்திற்குள் தெரிந்துவிடும்.