தமிழகத்தில் புதிய ஆட்சி அமைப்பதற்கான அரசியல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் விரைவில் முதலமைச்சராகப் பதவியேற்பார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. தமிழக சட்டப்பேரவையில் ஆட்சியமைக்கத் தேவையான பெரும்பான்மை பலமான 118 இடங்களை எட்டும் முயற்சியில் தமிழக வெற்றிக் கழகம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இதற்காகப் பல்வேறு அரசியல் கட்சிகளுடன் தவெக தலைமை நடத்திய பேச்சுவார்த்தையில் சுமுக முடிவு எட்டப்பட்டுள்ளது.

இதன்படி, காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்டு (சி.பி.ஐ.) மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு (சி.பி.எம்.) ஆகிய கட்சிகள் விஜய்க்கு ஆதரவு அளிப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளன. இந்த ஆதரவின் மூலம் தவெக கூட்டணியின் பலம் தற்போது 117-ஆக உயர்ந்துள்ளது.

இந்நிலையில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் (விசிக) ஆதரவு நிலைப்பாடு குறித்து இன்று அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. விசிக-வின் ஆதரவு கிடைக்கும் பட்சத்தில், தவெக கூட்டணியின் மொத்த பலம் 119-ஆக உயரும். இது ஆட்சியமைக்கத் தேவையான 118 என்ற எண்ணிக்கையை விட அதிகம் என்பதால், விஜய் முதலமைச்சராகப் பதவியேற்பது உறுதியாகிவிடும்.

விஜய்யின் இந்த அரசியல் வெற்றியைத் தொடர்ந்து, நடிகர் சிபி சத்யராஜ் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் நெகிழ்ச்சியான வாழ்த்துச் செய்தியைப் பகிர்ந்துள்ளார். அதில் அவர் குறிப்பிட்டிருப்பதாவது, இறுதிப் போரில் வெற்றி வாகை சூடிய நமது மதிப்பிற்குரிய முதலமைச்சர் தளபதி விஜய் அண்ணா அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.

இக்கட்டான காலங்களில் ஒரு மனிதர் எவ்வாறு மன உறுதியுடன் திகழ வேண்டும் என்பதற்கும், தடைகளைக் கடந்து கொள்கைகளில் எவ்வாறு உறுதியாக இருக்க வேண்டும் என்பதற்கும் இவரது வெற்றி ஒரு சிறந்த பாடம். இது தமிழ்நாட்டிற்குப் புதிய பாதையையும் நம்பிக்கையையும் அளித்திட மக்கள் வழங்கிய ஆணை. ஒரு பேரே வரலாறு. அரசியல் ரீதியாக அனைத்துச் சூழல்களும் சாதகமாகத் திரும்புவதால், தமிழகத்தின் அடுத்த முதலமைச்சராக விஜய் பதவியேற்பதற்கான ஆயத்தப் பணிகள் விரைவில் தொடங்கும் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.