தமிழகச் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகி, தமிழக வெற்றிக் கழகம் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள நிலையில், ஆட்சியமைப்பதில் கடும் முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளது. நள்ளிரவில் ஆளுநர் மாளிகையில் அரங்கேறிய அதிரடி திருப்பங்களால் தமிழக அரசியல் களம் உச்சகட்டப் பரபரப்பில் உள்ளது. சமீபத்தில் நடைபெற்ற தேர்தலில் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களில் வெற்றி பெற்றது. ஆட்சியமைக்க 118 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு தேவை என்ற நிலையில், காங்கிரஸ் (5), சி.பி.ஐ. (2), சி.பி.எம். (2) ஆகிய கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. இதன் மூலம் பலம் 117-ஆக உயர்ந்தது. விசிக-வின் ஆதரவு கிடைத்தால் எண்ணிக்கை 119-ஆக உயரும் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்த நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தன்னுடைய முடிவை இன்று அறிவிக்கிறார். அவர் விஜய்க்கு சாதகமாக முடிவெடுத்தால் இன்று மாலை முதல்வர் பதவி ஏற்பு விழா நடைபெறும் என்று கூறப்படுகிறது. இதற்கிடையில் திருமாவளவன் ஆதரவாளர்கள் தற்போது சமூக வலைதளங்களில் இது திருமா காலம் என்று அதிரடியாக பதிவிட்டு வருகின்றனர். அந்த வகையில் வன்னியரசு அடுத்தடுத்து பதிவிடும் கருத்துகள் பரபரப்பாக பேசப்படுகிறது.

நேற்று ஆட்சியிலும் பங்கு அதிகாரத்திலும் பங்கு இது திருமா  காலம் என்று பதிவிட்டு இருந்தார். இதனைத் தொடர்ந்து தற்போது எம்மை ஓரங்கட்ட நினைத்தாலும் ஒதுக்க நினைத்தாலும் நாங்களே மையம் என்பதை தீர்மானிப்போம் என்று பதிவிட்டுள்ளார். மேலும் திருமாவளவன் திருச்சி கிழக்கில் போட்டியிட்டு வெற்றி பெற வேண்டும் எனவும் அவருக்கு துணை முதல்வர் பதவி கொடுக்க வேண்டும் எனவும் விஜயிடம் விசிக கட்சி கோரிக்கை விடுத்துள்ளதாக ஒரு தகவல் பரவி வருவது குறிப்பிடத்தக்கது.