தமிழக சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், தமிழக வெற்றி கழகம் (த.வெ.க) தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தும் ஆட்சி அமைக்க முடியாமல் இழுபறி நீடிப்பது அரசியல் வட்டாரத்தில் புயலைக் கிளப்பியுள்ளது. நடிகர் விஜய்யின் தமிழக வெற்றி கழகம் 108 இடங்களைத் தன்வசப்படுத்தியுள்ளது. காங்கிரஸ் கட்சியின் 5 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு அளித்துள்ள போதிலும், ஆட்சி அமைக்கத் தேவையான 118 இடங்களை எட்ட இன்னும் 5 இடங்கள் குறைவாகவே உள்ளன. மற்ற கட்சிகள் இதுவரை ஆதரவு வழங்காததால், த.வெ.க ஆட்சி அமைப்பதில் தொடர்ந்து முட்டுக்கட்டை நீடிக்கிறது.

இந்தச் சூழலில், தமிழக அரசியலில் இதுவரை கண்டிராத ஒரு திருப்பமாக, பரம எதிரிகளான தி.மு.க-வும், அ.தி.மு.க-வும் இணைந்து கூட்டணி ஆட்சி அமைக்கப் போவதாகத் தகவல்கள் கசிந்துள்ளன. விஜய்யின் வளர்ச்சியைத் தடுக்கவே இந்த வியூகம் வகுக்கப்படுவதாகக் கூறப்படுகிறது. இந்தத் தகவலுக்கு நடிகர் விஷால் தனது சமூக வலைதளப் பக்கத்தில் கடும் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது,

அடுத்த அரசாங்கத்தை அமைப்பதற்கு, த.வெ.க அல்லாத வேறு ஏதேனும் ஒரு தரப்பு, குறிப்பாகக் கற்பனைக்கே எட்டாத தி.மு.க-அதிமுக கூட்டணி அதிகாரத்திற்கு வருமானால், அது சாமானிய மக்கள் மத்தியில் பேரழிவையும் விபரீதத்தையும் ஏற்படுத்தும். ஒரு குடிமகனாகவும் வாக்காளனாகவும் இதை நான் ஏற்கவே மாட்டேன். இது எவருக்கும் சற்றும் ஏற்புடையதாக இருக்காது.

விஷாலின் இந்த அதிரடியான கருத்து, ஏற்கனவே கொந்தளிப்பாக இருக்கும் தமிழக அரசியலில் மேலும் அனலைக் கூட்டியுள்ளது. தமிழகத்தின் அடுத்த முதல்வர் யார்? என்ற கேள்விக்கு இன்னும் விடை கிடைக்காததால் மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.