தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிந்து ஒட்டுமொத்த நாடும் ஜூன் 4-ஆம் தேதி முடிவுகளுக்காகக் காத்திருக்கும் நிலையில், ‘ஆக்சிஸ் மை இந்தியா’ வெளியிட்டுள்ள தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு (Exit Poll) தமிழக அரசியலில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்தக் கணிப்பின்படி, தமிழகத்தில் முன்னெப்போதும் இல்லாத வகையில் ‘விஜய் அலை’ வீசுவதாகவும், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 98 முதல் 120 தொகுதிகளைக் கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக ஆட்சியமைக்க வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய ஆளுங்கட்சியான திமுக கூட்டணி 91 முதல் 110 இடங்களைப் பிடித்து தவெக-வுக்கு கடும் போட்டியைத் தரும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், தமிழகத்தின் மற்றொரு பிரதான கட்சியான அதிமுக 22 முதல் 32 இடங்களுக்குத் தள்ளப்பட்டு மூன்றாவது இடத்தைப் பிடிக்கும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த எக்ஸிட் போல் முடிவுகள் உண்மையானால், தமிழக அரசியல் வரலாற்றில் இது ஒரு மிகப்பெரிய திருப்புமுனையாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.
