மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா, கடந்த பிப்ரவரி 24-ம் தேதி புதிய கட்சியைத் தொடங்கினார். இன்று அந்தக் கட்சியின் பெயர் மற்றும் சின்னம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை அவர் வெளியிட்டுள்ளார்.
சசிகலா தனது கட்சிக்கு “அனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்ற கழகம்” (அஇபுதமமுக) என்று பெயரிட்டுள்ளார். இந்தக் கட்சிக்குத் தேர்தல் ஆணையம் “தென்னந்தோப்பு” சின்னத்தை ஒதுக்கியுள்ளது.
“நான் ஒரு தனி மரமாக வரவில்லை, ஒரு தோப்பாகவே வந்துள்ளேன். நான் எப்போதும் மக்களுடன்தான் இருப்பேன் என்பதற்கு இந்தத் தென்னந்தோப்பு சின்னமே சாட்சி” என்று சசிகலா நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யுடன் கூட்டணி அமைப்பீர்களா என்ற கேள்விக்குச் சசிகலா நேரடியாகப் பதிலளித்தார். கொள்கை அளவில் ஒருமித்த கருத்து கொண்ட கட்சிகளுடன் மட்டுமே கூட்டணி அமைக்கப்படும்.
தென்னந்தோப்பு சின்னத்தை வைத்துக்கொண்டு நிச்சயமாகக் கூட்டணி அமைத்தே தேர்தலைச் சந்திப்போம்.எடப்பாடி பழனிசாமிக்குச் செல்வாக்கு இருக்கிறதா இல்லையா என்பது தேர்தல் முடிவுகளில் தெரிந்துவிடும் என்றும் அவர் கூறினார்.
சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் வேளையில் சசிகலாவின் இந்த அதிரடி நகர்வு அரசியலில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. சசிகலா தரப்பு செங்கோட்டையன் வழியாக விஜய்யின் தவெக-வுடன் இணைய வாய்ப்புள்ளதாகக் கருதப்படுகிறது. சசிகலாவால் அதிமுகவின் முக்கிய நிர்வாகிகளைத் தனது பக்கம் இழுக்க முடியும் என்பதால், வரும் தேர்தலில் இந்தக் கூட்டணி ஒரு முக்கிய சக்தியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
