பிரபல திரைப்பட நடிகை ஐஸ்வர்யா ராய் பெயரில் போலி இணையதளம் ஒன்று துவங்கப்பட்டுள்ளதாக கூறி, தனி உரிமை மற்றும் நற்பெயரை பாதுகாக்க வேண்டும் எனக் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கில், தனது பெயரைப் பயன்படுத்தி அனுமதியில்லாமல் போலி தகவல்களை பரப்பும் இந்த இணையதளம், தன்னை சட்டவிரோதமான பிரச்சனைகளில் இழுத்துவிடும் அபாயம் உள்ளதாக நடிகை தெரிவித்து இருந்தார். இதையடுத்து இந்த வழக்கு மீது விசாரணை நடத்திய நீதிமன்றம், குறித்த போலி இணையதள முகவரியை உடனடியாக நீக்க வேண்டும் என கண்டிப்பாக உத்தரவு பிறப்பித்தது.

மேலும், இதுகுறித்து டெல்லி உயர் நீதிமன்றம், “போலி இணையதள முகவரி நீக்கப்படாவிட்டால், கூகுள் உள்ளிட்ட தேடல் எஞ்சின்கள் மீது நடவடிக்கை எடுக்க நேரிடும். அவற்றை இந்த வழக்கில் பிரதிவாதிகளாக இணைக்கும் நிலை ஏற்படும்” என எச்சரிக்கையும் விடுத்துள்ளது.

இதனால், இணையவழியில் பிரபலங்களின் பெயர்களை பயன்படுத்தி போலியான தளங்களை உருவாக்கும் செயல்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் தீவிரமாகும் சூழ்நிலை உருவாகியுள்ளது.