திருப்பத்தூர் மாவட்டம் அரசு நகராட்சி நடுநிலைப் பள்ளியில், 2026-2027ஆம் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை ‘கியூ.ஆர். கோடு’ மூலம் ஆன்லைனில் புதுமையாகத் தொடங்கப்பட்டுள்ளது. அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்கவும், பெற்றோர்கள் எளிதாகப் பிள்ளைகளைச் சேர்க்கவும் பள்ளி ஆசிரியர்கள் இந்த டிஜிட்டல் முறையை அறிமுகப்படுத்தியுள்ளனர். இதற்காக முக்கிய பொது இடங்களில் கியூ.ஆர். கோடு அடங்கிய பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன.
பெற்றோர்கள் தங்கள் செல்போன் மூலம் இதை ஸ்கேன் செய்து, மாணவர் பெயர் மற்றும் விவரங்களைப் பதிவு செய்து உடனடியாகச் சேர்க்கையை உறுதி செய்துகொள்ளலாம். இதனால் பள்ளிக்கு நேரில் அலைவது தவிர்க்கப்படுவதால், தினக்கூலி வேலைக்குச் செல்லும் பெற்றோர்களுக்கு இது மிகவும் பயனுள்ளதாக அமைந்துள்ளது.
தனியார் பள்ளிகளுக்கு இணையாக டிஜிட்டல் வகுப்பறை, கணினி வழிக்கல்வி, விளையாட்டு மற்றும் கலைப் பயிற்சிகள் போன்ற பல்வேறு சிறப்பம்சங்கள் இந்தப் பள்ளியில் வழங்கப்பட்டு வருகின்றன. கல்வித்துறையில் தொழில்நுட்பத்தை எளிய முறையில் பயன்படுத்திய ஆசிரியர்களின் இந்த முயற்சிக்குக் கல்வியாளர்களும் பொதுமக்களும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
இந்த அதிநவீன டிஜிட்டல் சேர்க்கை முறை காரணமாக, இந்த ஆண்டில் பள்ளியில் மாணவர் சேர்க்கை பெருமளவில் அதிகரிக்கும் என்ற நம்பிக்கையில் ஆசிரியர்கள் உற்சாகமாகப் பணியாற்றி வருகின்றனர்.
