தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த நேர்காணலில் 2026 சட்டமன்றத் தேர்தலில் தனது கட்சி தனித்துப் போட்டியிடப் போவதை முதன்முறையாக உறுதி செய்துள்ளார். “நான் கிங் மேக்கராக இருக்க விரும்பவில்லை, நான் தான் வெற்றியாளனாக (King) இருப்பேன்” என்று அவர் அதிரடியாகத் தெரிவித்துள்ளார். முன்னதாக, ஆட்சியில் பங்கு என்ற வாக்குறுதியை அளித்து காங்கிரஸ், அமமுக, பாமக போன்ற கட்சிகளுடன் தவெக பேச்சுவார்த்தை நடத்தி வந்ததாகக் கூறப்பட்ட நிலையில், தற்போது அந்த நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டு தனித்துப் போட்டியிட விஜய் முடிவு செய்துள்ளார்.
தான் செய்ய வேண்டிய காரியங்களில் மிகவும் தெளிவாக இருப்பதாகவும், வெற்றியை நோக்கியே தனது பயணம் இருக்கும் என்றும் அவர் அந்த நேர்காணலில் திட்டவட்டமாகக் கூறியுள்ளார். விஜய்யின் இந்தத் திடீர் அறிவிப்பு, தமிழகத்தின் பாரம்பரிய திராவிடக் கட்சிகளுக்கும், அவருடன் கூட்டணி வைக்கக் காத்திருந்த கட்சிகளுக்கும் பெரும் அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது. இந்தத் தனித்துப் போட்டி முடிவால் 2026 தேர்தல் களம் ஒரு மும்முனைப் போட்டியாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
