விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், சமீபத்தில் பேசியபோது சோழ மன்னர்கள் குறித்த சில சர்ச்சைக்குரிய கருத்துகளை முன்வைத்துள்ளார். “ராஜராஜன், ராஜேந்திரன் என்பதெல்லாம் தமிழ் பெயர்களா? இவர்கள் பார்ப்பனர்களின் வேள்வி மற்றும் யாகங்களில் மயங்கிக் கிடந்தவர்கள்; எப்பேர்ப்பட்ட மன்னர்களாக இருந்தாலும், தமிழ் மற்றும் தமிழ் கலாச்சாரம் அழிவதற்கு இவர்களே வழிவகுத்தார்கள்” என்று அவர் விமர்சித்துள்ளார். மேலும், “ஆண்ட பரம்பரை” என்று சொல்வதில் தமக்கு உடன்பாடு இல்லை என்றும் அவர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
திருமாவளவனின் இந்தப் பேச்சுக்கு அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். “வரலாற்றுச் சிறப்புமிக்க சேர, சோழ, பாண்டிய, பல்லவ மன்னர்கள் மீது அவதூறுகளை அள்ளி வீசுவதை திருமாவளவன் நிறுத்திக்கொள்ள வேண்டும்; தமிழ்க் கலாச்சாரம் அழிய இவர்களே வழிவகுத்தார்கள் என்று பேசுவது மிகுந்த வருத்தத்திற்குரியது” என்று அவர் சாடியுள்ளார். வரலாற்றில் நீங்கா இடம் பிடித்த மன்னர்களை தற்போதைய அரசியலுக்காக இழிவுபடுத்துவது கண்டிக்கத்தக்கது என்பது தினகரனின் வாதமாக உள்ளது.
