மத்திய கிழக்கில் ஈரான், இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இடையே நிலவி வரும் போரினால் உலகமே எரிபொருள் தட்டுப்பாட்டைச் சந்தித்து வருகிறது. குறிப்பாக, உலக கச்சா எண்ணெய் தேவையில் 25 சதவீதத்தைப் பூர்த்தி செய்யும் ‘ஹார்முஸ்’ ஜலசந்தியை ஈரான் மூடியது, சர்வதேச சந்தையில் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியது.
இருப்பினும், தற்போது இந்தியா போன்ற தனது நட்பு நாடுகளின் நலனைக் கருத்தில் கொண்டு, ஈரான் இந்த முக்கிய கடல் வழித்தடத்தை மீண்டும் திறந்துள்ளதாக ஒரு மகிழ்ச்சியான செய்தி வெளியாகியுள்ளது.
இதன் மூலம் இந்தியாவிற்கு வர வேண்டிய கச்சா எண்ணெய் கப்பல்கள் தடையின்றி வரத் தொடங்கியுள்ளன, இது உள்நாட்டில் நிலவி வந்த எரிபொருள் பற்றாக்குறைக்கு ஒரு தற்காலிகத் தீர்வாக அமைந்துள்ளது.
இந்தத் திடீர் மாற்றத்தை கப்பல்களைக் கண்காணிக்கும் நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது. இந்த வழித்தடம் இந்தியா, சீனா உள்ளிட்ட ஈரானின் நட்பு நாடுகளுக்காக மட்டுமே திறக்கப்பட்டுள்ளது; அதே சமயம் இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவிற்கு ஆதரவளிக்கும் மேற்கத்திய நாடுகளுக்கு இந்த ஜலசந்தி தொடர்ந்து மூடப்பட்டிருக்கும் என்று ஈரான் அறிவித்துள்ளது.
ஈரானின் இந்த ராஜதந்திர முடிவால் இந்தியா பெரும் நிம்மதி அடைந்துள்ளது. ஏற்கனவே தனது இரண்டு கப்பல்களை ஈரான் விடுவித்திருந்த நிலையில், தற்போது முழுமையான போக்குவரத்து அனுமதி கிடைத்திருப்பது இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்யப் பெரிதும் உதவும்.
