மத்திய கிழக்கு நாடுகளில் போர் சூழல் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், கத்தாரில் உள்ள உலகின் மிகப்பெரிய எல்பிஜி (LPG) ஆலை மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளது. இதனால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை வரலாறு காணாத அளவில் உயர்ந்துள்ளது.

கடந்த பிப்ரவரி 28-ஆம் தேதி முதல் அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே நேரடிப் போர் நடைபெற்று வருகிறது. இரு தரப்பினரும் மாறி மாறித் தாக்குதல் நடத்தி வரும் நிலையில், நேற்று ஈரானில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இதற்குப் பதிலடியாக, இன்று காலை கத்தாரில் உள்ள உலகின் மிகப்பெரிய எல்பிஜி ஆலை மீது ஈரான் பல ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியுள்ளது.

இந்தத் தாக்குதலால் ஆலை முழுவதும் தீப்பற்றி எரிந்து வரும் நிலையில், தீயை அணைக்கும் பணியில் கத்தார் அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளது. உயிரிழப்புகள் குறித்த விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை. இருப்பினும், கத்தாரில் உள்ள ஈரான் தூதரக அதிகாரிகளை உடனடியாக வெளியேற கத்தார் அரசு உத்தரவிட்டுள்ளது.

ஈரானின் இந்த நடவடிக்கைக்கு சவுதி அரேபியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சவுதி இளவரசர் பைசல் பின் ஃபர்ஹான் கூறுகையில், “எங்களது பொறுமைக்கும் ஓர் எல்லை உண்டு. ஈரான் மீதிருந்த கடைசி நம்பிக்கையும் சிதைந்துவிட்டது. சர்வதேச சட்டங்களை மீறி சவுதி மற்றும் ஐக்கிய அரபு அமீரகப் பொதுமக்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளது. இதற்கு ராணுவ ரீதியாகப் பதிலடி கொடுக்கும் உரிமை எங்களுக்கு உண்டு,” என எச்சரித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் டிரம்ப் விடுத்துள்ள அறிக்கையில், “ஈரானின் முக்கிய எண்ணெய் ஏற்றுமதி மையமான கார்க் தீவு (Kharg Island) மீது விரைவில் பலமான தாக்குதல் நடத்தப்படும். ஈரானில் எஞ்சியுள்ள இலக்குகளை ராணுவ ரீதியாக அமெரிக்கா விரைவில் அழிக்கும்,” எனத் தெரிவித்துள்ளார். மேலும், ஹார்மூஸ் ஜலசந்தியைப் பாதுகாக்கப் போர்க்கப்பல்களை அனுப்பாத நட்பு நாடுகளுக்கும் அவர் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தப் போர் பதற்றத்தால் உலகப் பொருளாதாரம் பெரும் பாதிப்பைச் சந்தித்துள்ளது. இன்றைய நிலவரப்படி, கச்சா எண்ணெய் ஒரு பீப்பாய் 108 டாலரை எட்டியுள்ளது.
“ஈரானின் 90 சதவீத எண்ணெய் ஏற்றுமதி நடைபெறும் கார்க் தீவு மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தினால், ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் விலை 150 டாலரைத் தொடக்கூடும்” எனப் பொருளாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.