அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் ஈரான் மீது நடத்தி வரும் தாக்குதல் மூன்றாவது வாரமாகத் தீவிரமடைந்துள்ள நிலையில், போரின் அடுத்த கட்டமாக ஈரானுக்குள் தரைப்படையை அனுப்பும் அதிரடித் திட்டத்தை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பரிசீலித்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த பிப்ரவரி 28-ஆம் தேதி தொடங்கிய இந்தப் போர், தற்போது இரு நாடுகளின் எரிசக்தி மையங்களை இலக்கு வைத்து நகர்ந்து வருகிறது. ஈரானின் எரிவாயு வயல்களை இஸ்ரேல் தாக்கியதற்குப் பதிலடியாக, கத்தாரில் உள்ள எரிவாயு ஆலைகள் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியது. அதோடு சர்வதேச கச்சா எண்ணெய் போக்குவரத்திற்கு முக்கிய வழித்தடமாக விளங்கும் ஹார்மூஸ் ஜலசந்தியை ஈரான் மூடியுள்ளதால், உலகளாவிய எரிசக்தி விநியோகத்தில் பெரும் முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளது.

ஹார்மூஸ் ஜலசந்தியை மீண்டும் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரவும், எண்ணெய் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்கவும் மத்திய கிழக்கு நாடுகளுக்குப் பல ஆயிரம் கூடுதல் வீரர்களை அனுப்ப அமெரிக்கா முடிவு செய்துள்ளது. இதனை வெள்ளை மாளிகை அதிகாரிகளும் உறுதிப்படுத்தியுள்ளனர்.

முதற்கட்டமாக விமானப்படை மற்றும் கடற்படை மூலம் தாக்குதல்கள் நடத்தப்பட்டாலும், வரும் நாட்களில் ஈரானின் கடற்கரையோரப் பகுதிகளில் தரைப்படையை இறக்கி நேரடித் தாக்குதலில் ஈடுபட டிரம்ப் நிர்வாகம் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.

ஈரானின் 90 சதவீத கச்சா எண்ணெய் ஏற்றுமதியைக் கையாளும் கார்க் (Kharg) தீவைக் கைப்பற்றுவது குறித்து அமெரிக்க ராணுவம் ஆலோசித்து வருகிறது. எனினும், ஈரானின் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன் தாக்குதல்கள் அமெரிக்க வீரர்களுக்குப் பெரும் அச்சுறுத்தலாக அமையக்கூடும் என்பதால், இந்தத் திட்டம் குறித்து ராணுவ அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

ஈரானை முழுமையாக வீழ்த்தும் வரை ஓயப்போவதில்லை என அதிபர் டிரம்ப் எச்சரித்துள்ளார். ஒருவேளை அமெரிக்கத் தரைப்படை ஈரானுக்குள் நுழைந்தால், இந்தப் போர் நீண்ட கால மோதலாக உருவெடுத்து உலகப் பொருளாதாரத்தைப் பெருமளவில் பாதிக்கும் என அரசியல் நோக்கர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

அதன்படி அரபு நாடுகளில் இந்தியர்கள் மேற்கொண்டுள்ள சுமார் ரூ.12,000 கோடி முதலீடுகள் மற்றும் 800-க்கும் மேற்பட்ட நிறுவனங்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது. உலகளாவிய பதற்றம் காரணமாகத் தங்கம் மற்றும் பங்குச் சந்தையில் கடும் ஏற்ற இறக்கங்கள் நிலவுகின்றன. மேலும் இதற்கிடையில் ஹார்மூஸ் ஜலசந்தியில் சிக்கியுள்ள 3 லட்சம் டன் இந்திய எல்பிஜி (LPG) சரக்குகளை மீட்பது குறித்து மத்திய அரசு தீவிரமாக ஆலோசித்து வருகிறது.