மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றத்தால் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து, பாகிஸ்தானில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், அந்த நாட்டுக்கு சலுகை விலையில் எண்ணெய் வழங்க ரஷ்யா முன்வந்துள்ளது. அமெரிக்கா – இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான போர் காரணமாக, சர்வதேச கடல்வழிப் பாதையான ஹார்மூஸ் ஜலசந்தி மூடப்பட்டுள்ளது. இதனால் பாகிஸ்தானுக்குக் கிடைத்து வந்த எண்ணெய் விநியோகம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
இதன் விளைவாக, அங்கு பெட்ரோல் மற்றும் டீசல் விலையை ஒரே நாளில் 20 சதவீதம் வரை அந்நாட்டு அரசு உயர்த்தியுள்ளது. ஏற்கனவே கடும் பணவீக்கத்தில் தவித்து வரும் பாகிஸ்தான் மக்கள், இந்த விலை உயர்வால் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
பாகிஸ்தானின் இந்த இக்கட்டான சூழலில், ரஷ்யத் தூதர் ஆல்பர்ட் கோரேவ் இஸ்லாமாபாத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, “பாகிஸ்தானின் எண்ணெய் தேவையை எவ்விதத் தடையுமின்றிப் பூர்த்தி செய்ய ரஷ்யா தயாராக உள்ளது. பாகிஸ்தான் அரசு அதிகாரப்பூர்வமாக எங்களிடம் கோரிக்கை வைத்தால், சலுகை விலையில் கச்சா எண்ணெய் வழங்க மாஸ்கோ தயங்காது. ஆனால், இதுவரை பாகிஸ்தான் தரப்பிலிருந்து முறையான அழைப்பு ஏதும் வரவில்லை.
இந்தச் சலுகை விலை எண்ணெய் கிடைத்தால் மட்டுமே பாகிஸ்தானில் நிலவும் எரிபொருள் தட்டுப்பாட்டிற்கு நிரந்தரத் தீர்வு கிடைக்கும் என அந்நாட்டுப் பொருளாதார வல்லுநர்கள் கருதுகின்றனர். சர்வதேச சந்தையில் நிலவும் சூழலால், இதுவரை இந்தியாவுக்கு வழங்கி வந்த தள்ளுபடியை ரஷ்யா குறைத்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது ரஷ்யாவின் ‘யூரல்ஸ்’ (Urals) ரக கச்சா எண்ணெய் ஒரு பீப்பாய் 100 டாலரை நெருங்கியுள்ளது.
மறுபுறம், மத்திய கிழக்கில் போர் மூண்டது ரஷ்ய அதிபர் புதினுக்குப் பொருளாதார ரீதியாகப் பெரும் சாதகமாக அமைந்துள்ளது. கச்சா எண்ணெய் விலை உயர்வால் ரஷ்யாவுக்கு நாளொன்றுக்குக் கூடுதலாக 150 மில்லியன் டாலர் (சுமார் ரூ.1,250 கோடி) வருவாய் கிடைப்பதாகக் கூறப்படுகிறது. இந்த உபரி வருவாயை உக்ரைன் போருக்காக ரஷ்யா பயன்படுத்தி வருவதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
மேலும் பாகிஸ்தானுக்கு ரஷ்யா உதவிக்கரம் நீட்டுவது, அந்தப் பிராந்தியத்தில் அமெரிக்காவின் செல்வாக்கிற்கு விடுக்கப்படும் சவாலாகப் பார்க்கப்படுகிறது. பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தலைமையிலான அரசு, ரஷ்யாவின் இந்த ஆஃபரை ஏற்குமா என்பது வரும் நாட்களில் தெரியவரும்.
