ஈரான் மீதான போர் மூன்றாவது வாரத்தை எட்டியுள்ள நிலையில், தாக்குதலின் பொறுப்பை ஏற்றுக்கொள்வதில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இது உலக நாடுகளிடையே பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது கடந்த புதன்கிழமை ஈரானின் தென்மேற்குப் பகுதியில் உள்ள ‘அஸ்லுயே’ (Asaluyeh) எண்ணெய் மற்றும் எரிவாயு ஆலைகள் மற்றும் உலகின் மிகப்பெரிய இயற்கை எரிவாயு வயலான ‘சவுத் பார்ஸ்’ (South Pars) மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்பட்டது.
இந்தத் தாக்குதல் குறித்து இஸ்ரேலிய அதிகாரிகள் தரப்பில் கூறுகையில், “அமெரிக்காவுடன் ஒருங்கிணைந்து திட்டமிடப்பட்டே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது” எனத் தெரிவிக்கப்பட்டது. ஆனால், இதனை அமெரிக்கா திட்டவட்டமாக மறுத்துள்ளது. “ஈரான் எரிவாயு ஆலை மீதான தாக்குதலுக்கும் அமெரிக்காவிற்கும் எந்தத் தொடர்பும் இல்லை; இது இஸ்ரேல் மட்டுமே நடத்திய தாக்குதல்” என அதிபர் ட்ரம்ப் கூறியுள்ளார்.
ஈரான் மிகக் குறுகிய காலத்திலேயே சரணடைந்துவிடும் என்றும், அந்நாட்டின் ஆட்சி அதிகாரத்தை மாற்றிவிடலாம் என்றும் அதிபர் டிரம்ப் கணக்கு போட்டிருந்தார். ஆனால், ஈரானின் கடுமையான எதிர்ப்பும், அமெரிக்காவின் நவீன பாதுகாப்பு அமைப்புகளைத் தகர்க்கும் அளவிற்கான ஈரானின் ஏவுகணைத் திறனும் அமெரிக்காவை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
தொடர்ந்து நீடிக்கும் போர் மற்றும் அதிகரித்து வரும் போர்ச் செலவுகள் காரணமாக, இந்தப் போரிலிருந்து அமெரிக்கா பின்வாங்கப் பார்ப்பதாக ‘நியூயார்க் டைம்ஸ்’ செய்தி வெளியிட்டுள்ளது. ஈரானை பணிய வைக்க முடியாத சூழலில், ஹார்மூஸ் ஜலசந்தி மூடப்பட்டது உலகளாவிய எரிசக்தி நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது டிரம்பிற்கு பெரும் நெருக்கடியைக் கொடுத்துள்ளது.
ஈரான் விவகாரத்தில் அமெரிக்காவிற்கு ஆதரவாக நேட்டோ (NATO) நாடுகள் களம் இறங்கவில்லை. “இது அமெரிக்காவின் தனிப்பட்ட போர்; எங்களுக்கும் இதற்கும் தொடர்பில்லை” என ஐரோப்பிய நாடுகள் ஒதுங்கிக் கொண்டன. இதனால் சர்வதேச அரங்கில் அமெரிக்கா தனித்து விடப்பட்டுள்ளது.
ஈரான் தனது நாட்டின் மீதான தாக்குதலுக்குப் பதிலடியாக, கத்தார் மற்றும் சவுதி அரேபியாவில் உள்ள எண்ணெய் மற்றும் எரிவாயு நிலையங்களைக் குறிவைத்துத் தாக்குதல் நடத்தியுள்ளது. சவுத் பார்ஸ் எரிவாயு வயல் ஈரான் மற்றும் கத்தார் ஆகிய இரு நாடுகளுக்கும் பொதுவானது என்பதால், அங்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு உலகளாவிய எரிசக்தி பாதுகாப்பிற்குப் பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது. மேலும் ஈரான் போரைத் தொடர்வதா அல்லது வெற்றியடைந்ததாக அறிவித்துவிட்டுப் பின்வாங்குவதா என்ற இக்கட்டான நிலையில் அதிபர் டிரம்ப் இருப்பதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
