செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே பெயிண்ட்டில் கலக்கப் பயன்படுத்தப்படும் தின்னர் திரவத்தைத் தண்ணீருக்குப் பதிலாகத் தவறாகக் குடித்த ஒன்றரை வயதுப் பெண் குழந்தை உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மதுராந்தகம் அடுத்த தேவதூர் கிராமத்தைச் சேர்ந்த வினோத்குமார் என்பவரின் மகள், கடந்த 7 நாட்களுக்கு முன்பு வீட்டில் வைத்திருந்த தின்னர் திரவத்தைத் தெரியாமல் குடித்துள்ளார். இதனால் மயக்கமடைந்த குழந்தையை மீட்ட பெற்றோர், உடனடியாகச் செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

அங்குத் தீவிர சிகிச்சைப் பிரிவில் கண்காணிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று அந்தக் குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. இச்சம்பவம் குறித்துச் சித்தாமூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.