நடிகர் விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படத்திற்கு தணிக்கைச் சான்றிதழ் வழங்குவது தொடர்பான விவகாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்தப் படத்திற்கு தணிக்கை வாரியம் சான்றிதழ் வழங்க மறுத்ததை எதிர்த்து, தயாரிப்பு நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
தனி நீதிபதி படத்திற்கு சான்றிதழ் வழங்க உத்தரவிட்ட போதிலும், தணிக்கை வாரியம் செய்த மேல்முறையீட்டால் அந்த உத்தரவுக்கு உயர்நீதிமன்ற டிவிஷன் பெஞ்ச் தடை விதித்தது.
இதையடுத்து தயாரிப்பு நிறுவனம் உச்சநீதிமன்றத்தை நாடிய நிலையில், இந்த வழக்கை மீண்டும் சென்னை உயர்நீதிமன்றமே விசாரிக்குமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
இதனைத் தொடர்ந்து, தனி நீதிபதியின் தீர்ப்புக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கக் கோரி தயாரிப்பு நிறுவனம் மீண்டும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.
இந்த முக்கியமான வழக்கு, இன்று காலை 11.30 மணியளவில் தலைமை நீதிபதி மணீந்திர மோகன் ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி அருள் முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக விசாரணைக்கு வர உள்ளது.
இந்த விசாரணையின் முடிவில் ‘ஜனநாயகன்’ படத்தின் வெளியீடு மற்றும் தணிக்கைச் சான்றிதழ் குறித்த இறுதித் தகவல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
