ஹரியானா மாநிலம் பானிப்பட்டில், பல குழந்தைகளைக் கொன்றதாகக் குற்றம் சாட்டப்பட்ட 34 வயது பூனம் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டார். இவரின் கணவர் நவீன், பூனம் மீது கொலை வழக்குத் தொடுத்துள்ளார். தன் குழந்தையை விட “அழகாக” இருக்கும் குழந்தைகளைக் கொல்லத் தூண்டப்படுவதாகப் பூனம் ஒப்புக்கொண்டதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது.

முந்தைய கொலைகளில் ஒன்றைத் தன் மகன் பார்த்துவிட்டான் என்ற பயத்தில், தன்னுடைய மகனையும் பூனம் கொன்றுள்ளார். மற்ற உறவினர்களின் குழந்தைகளை அவர் கொன்றது, விபத்துகள் எனத் தவறாகக் கருதப்பட்டது. பூனம், குழந்தைகளுக்கு இனிப்புகள் கொடுத்து, அவர்களுடன் விளையாடி, நடனமாடி, அன்பான சைகைகள் மூலம் அவர்கள் நம்பிக்கையைப் பெற்றார். தசமி மற்றும் ஏகாதசி திதிகளின் சுப நேரங்களைக் கவனித்துக் கொலைகளைச் செய்துள்ளார்.

இதனால், இந்தக் கொலைகள் தாந்த்ரீக சடங்குகளுடன் தொடர்புடையதாக இருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது. ஜனவரி 12, 2023 அன்று, தன் மகன் சுபம் மற்றும் அண்ணன் மகள் இஷிகா ஆகியோரை அவர் கொன்றபோதும், அதேபோல ஆகஸ்ட் 18, 2025 அன்று அண்ணன் மகள் ஜியாவையும், டிசம்பர் 1, 2025 அன்று அண்ணன் மகள் விதியையும் கொன்றபோதும், இந்த ஏகாதசி திதி இருந்துள்ளது. அனைத்துக் கொலைகளின் நேரமும், பூனம் ஒரு தாந்த்ரீகரின் வழிகாட்டுதலின் கீழ் சடங்குகளைப் பின்பற்றியிருக்கலாம் என்பதைக் காட்டுகிறது.