தமிழகத்தில் திருப்பரங்குன்றம் மலையில் கார்த்திகை தீபம் ஏற்றுவதில் ஏற்பட்ட சர்ச்சைகள் குறித்து ஆந்திர மாநில துணை முதல்வர் பவன் கல்யாண் தனது எக்ஸ் (X) சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

கார்த்திகை மாதத்தில் மலையில் விளக்கு ஏற்றுவது ஒரு பண்டைய இந்து பாரம்பரியம் என்றும், ஆனால், இன்று இந்துக்கள் தங்கள் நம்பிக்கை மற்றும் மரபுகளைப் பின்பற்ற நீதிமன்றங்களை நாட வேண்டியிருப்பது துரதிர்ஷ்டவசமானது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். சட்டப் போராட்டத்தில் வெற்றி பெற்ற பிறகும், பக்தர்கள் தங்கள் சொந்த சொத்தில் ஒரு சிறிய, அமைதியான சடங்கைக் கூடச் செய்ய முடியாவிட்டால், இந்த நாட்டில் அவர்களுக்கு அரசியலமைப்பு நீதி எங்கே கிடைக்கும்? என்று அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.

“ஒரு புனித நாளைக் கொண்டாடுவதை வேறொரு நேரத்திற்கு மாற்ற முடியுமா? ஆனாலும், அந்த புனிதமான கார்த்திகை தீப தருணம் திருடப்பட்டுள்ளது,” என்று வேதனை தெரிவித்த பவன் கல்யாண், பக்தர்களின் கோயில்களையும் மத விவகாரங்களையும் நிர்வகிக்க ‘சனாதன தர்ம ரக்ஷா வாரியம்’ நமக்குத் தேவை என்றும் வலியுறுத்தியுள்ளார்.

இந்து மரபுகள் மற்றும் பழக்கவழக்கங்களைக் கேலி செய்வது சில குழுக்களுக்கு வழக்கமாகிவிட்டது என்றும், மற்ற மத நிகழ்வுகளின் விஷயத்திலும் அவர்களால் இதைச் செய்யத் துணிய முடியுமா என்றும் அவர் கேள்வி எழுப்பினார். காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை ஒவ்வொரு இந்துவும் தங்கள் சொந்த மண்ணில் எதிர்கொள்ளும் அவமானங்களைப் பற்றி விழித்துக் கொள்ளும் நாள் வரும் என்றும் அவர் நம்புவதாகத் தெரிவித்துள்ளார்.