கர்நாடக மாநிலத்தில் உள்ள பல்லாரி மாவட்டம் டவுன் பகுதியைச் சேர்ந்தவர் தொட்ட பசவா(19). இவர் ஐடிஐயில் படித்து வருகிறார். கல்லூரியில் நடந்த நிகழ்ச்சியின்போது 18 வயது நிரம்பாத சிறுமியுடன் தொட்ட பசவா பழகியுள்ளார். அவருடன் சேர்ந்து புகைப்படமும் எடுத்துள்ளார். தொட்ட பசவா அந்த சிறுமியுடன் எடுத்த புகைப்படத்தை வாட்ஸப் ஸ்டேட்டஸ் ஆக வைத்திருந்தார்.
அந்த போட்டோவை பார்த்து சிறுமியின் அண்ணன் கோபத்தில் ஐடிஐக்கு தனது நண்பர்களுடன் சென்று தனது தங்கையின் புகைப்படத்தை வாட்ஸப் ஸ்டேட்டஸ்சில் வைத்தது குறித்து தொட்ட பசவாவிடம் கேள்வி எழுப்பினார்.
பின்னர் கோபத்தில் மைதானத்தில் வைத்தே சிறுமியின் அண்ணன் உட்பட 10 பேர் தொட்ட பசவாவை கண்மூடித்தனமாக கிரிக்கெட் மட்டை, இரும்பு கம்பியால் சரமாரியாக தாக்கியுள்ளனர். தன்னை விட்டு விடும்படி தொட்ட பசவா அவர்களது காலில் விழுந்து கெஞ்சியும் தொடர்ந்து தாக்குதல் நடத்தியதாக தெரிகிறது.
இதனால் படுகாயம் அடைந்த தொட்ட பசவாவை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் சிறுமியின் அண்ணன் உள்பட 10 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்கள் தொட்ட பசவாவை தாக்கிய வீடியோ சோசியல் மீடியாவில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
