தமிழ்நாட்டில் காய்கறி சந்தையில் இன்று மீண்டும் தக்காளி விலை உயர்ந்ததால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இன்று கிலோவிற்கு ரூ.30 உயர்ந்ததால், மீண்டும் ரூ. 120க்கு விற்கப்படுகிறது. தக்காளி விலையை கட்டுப்படுத்த அரசு சார்பில் பண்ணை பசுமை கடைகளிலும், ரேஷன் கடைகளிலும் குறைந்த விலையில் விற்கப்படுகிறது. இது சென்னையில் மட்டும் நடைமுறையில் இருப்பதால், மற்ற மாவட்ட மக்கள் விலை உயர்வால் வேதனைப்படுகின்றனர்.

இந்நிலையில் வேலூர் மாவட்டம் சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் தக்காளியை ஏற்றிக் கொண்டு ஒரு லாரி சென்றுள்ளது. அப்போது, அந்த வழியாக இரு சக்கர வாகனத்தில் பயணித்த இளைஞர் தக்காளி விலை அதிகமாக உள்ளது. தக்காளி வேண்டும், கொஞ்சம் கொடுங்கள், எனக் கேட்டுள்ளார். இந்நிலையில், லாரியில் இருந்த நபர் இருசக்கர வாகனத்தில் செல்லும் இளைஞரிடம் தக்காளியை ஒன்றன் பின் ஒன்றாக தூக்கி வீசினார்‌. அந்த தக்காளியை இருசக்கர வாகனத்தில் செல்லும் இளைஞர்கள் பத்திரமாக கேட்ச் பிடித்து வைத்துக் கொண்டனர். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.