அணு ஆயுதத் தடை ஒப்பந்தத்தை ஈரான் ஏற்க மறுத்ததால், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் அந்த நாட்டின் மீது போர் தொடுத்து 25 நாட்களைக் கடந்துவிட்டது. இதற்குப் பதிலடியாக, வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது. மேலும், உலகளாவிய எண்ணெய் போக்குவரத்திற்கு மிக முக்கியமான ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடியுள்ளதால் சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விநியோகம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்தப் போரை முடிவுக்குக் கொண்டு வர அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் 15 அம்சத் திட்டத்தை முன்வைத்தும், ஈரான் அதனை ஏற்க மறுத்துத் தனது தாக்குதலைத் தொடர்ந்து நீடித்து வருகிறது. இந்த இக்கட்டான சூழலில், ஒரு முக்கிய திருப்பமாக இந்தியா உள்ளிட்ட நட்பு நாடுகளின் கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியைப் பயன்படுத்த ஈரான் அனுமதி அளித்துள்ளது.
இந்தியா, ரஷ்யா, சீனா, பாகிஸ்தான் மற்றும் ஈராக் ஆகிய நாடுகளின் கப்பல்கள் பாதுகாப்பாகக் கடந்து செல்லலாம் என்று ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர் அப்பாஸ் அர்காசி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். ஹார்முஸ் ஜலசந்தி முற்றிலும் மூடப்படவில்லை என்றும், ஈரானுடன் நட்பு பாராட்டும் நாடுகளுக்கு மட்டும் அங்கு எவ்வித தடையும் இருக்காது என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.
