அமெரிக்கா அதிபர் டொனால்ட் ட்ரம்ப், பிரதமர் நரேந்திர மோடியுடன் தனக்கிருக்கும் நெருக்கமான நட்பைப் பாராட்டி சமூக வலைதளத்தில் பதிவிட்டிருப்பது, பாகிஸ்தான் அரசியலில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் பதிவு, பாகிஸ்தான் ராணுவ தளபதி அசிம் முனீர் மற்றும் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் ஆகியோரின் எதிர்பார்ப்புகளைத் தகர்த்துள்ளதாகக் கூறி, சமூக வலைதளங்களில் பாகிஸ்தான் மக்கள் தங்கள் நாட்டுத் தலைவர்களைக் கடுமையாகக் கேலி செய்து வருகின்றனர்.
இந்தியாவிற்குச் சாதகமான ட்ரம்ப்பின் இந்த நிலைப்பாடு, பாகிஸ்தானின் வெளியுறவுக் கொள்கை மற்றும் அமெரிக்காவுடனான அந்த நாட்டு உறவில் பின்னடைவை ஏற்படுத்தக்கூடும் என்ற கவலை அந்நாட்டு மக்களிடையே எழுந்துள்ளது. குறிப்பாக, ‘பீல்ட் மார்ஷல்’ என வர்ணிக்கப்படும் அசிம் முனீர் மற்றும் பிரதமர் ஷெரீப் ஆகியோரை இலக்காகக் கொண்டு பாகிஸ்தானியர்கள் மீம்களைப் பகிர்ந்து வருகின்றனர்.
மேலும் ட்ரம்ப் – மோடி இடையிலான இந்த வலுவான பிணைப்பு, பாகிஸ்தானின் கனவுகளைத் தகர்த்துவிட்டதாகப் பதிவிட்டு வரும் மக்கள், தங்கள் நாட்டுத் தலைவர்கள் சர்வதேச அரங்கில் தனிமைப்படுத்தப்படுவதாக விமர்சிக்கின்றனர். ட்ரம்ப்பின் வருகை பாகிஸ்தானுக்குச் சாதகமாக இருக்கும் என்று அந்நாட்டு அரசு நம்பியிருந்த நிலையில், இந்த ‘ட்ரம்ப்-மோடி’ பதிவு அவர்களுக்குப் பெரும் ஏமாற்றத்தைத் தந்துள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
