வாஷிங்டன் ஹில்டன் ஹோட்டலில் நடைபெற்ற வெள்ளை மாளிகை நிருபர்கள் சங்க இரவு விருந்தின் போது துப்பாக்கிச் சூடு நடத்திய நபர், கலிபோர்னியாவைச் சேர்ந்த 31 வயதான கோல் ஆலன் என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர் உயர்கல்வி கற்றவர் என்பதுடன், கலிபோர்னியா இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜியில் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பட்டம் பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும், ஒரு தனியார் கல்வி நிறுவனத்தில் பகுதிநேர ஆசிரியராகப் பணியாற்றி வந்த இவர், டிசம்பர் 2024-ல் ‘மாதத்தின் சிறந்த ஆசிரியர்’ விருதினையும் வென்றுள்ளார். மென்பொருள் உருவாக்குநராகவும் இருந்த ஆலன், இந்தத் துப்பாக்கிச் சூட்டின் போது ஷாட்கன் மற்றும் கத்திகளைப் பயன்படுத்தியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தத் தாக்குதல் சம்பவத்தின் போது அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மற்றும் பல முக்கிய அதிகாரிகள் அந்த இடத்தில் இருந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பாதுகாப்பு அதிகாரிகளின் துரித நடவடிக்கையினால் அதிபர் ட்ரம்ப் மற்றும் பிற விருந்தினர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். பாதுகாப்புச் சாவடியைத் தாண்டிச் செல்ல முயன்ற கோல் ஆலனை ரகசியப் பிரிவு அதிகாரிகள் உடனடியாகக் கைது செய்தனர்.

இந்நிலையில் ஒரு அதிகாரியின் மீது துப்பாக்கி குண்டு பாய்ந்த போதிலும், அவர் குண்டு துளைக்காத கவசம் அணிந்திருந்ததால் உயிர் தப்பினார். ஆலனின் பின்னணி குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வரும் நிலையில், இந்தத் தாக்குதலுக்கான தெளிவான நோக்கம் இன்னும் கண்டறியப்படவில்லை.