கூட்ட நெரிசல் மிகுந்த பேருந்து ஒன்றில், இளம்பெண்ணிடம் தவறான முறையில் நடக்க முயன்ற நபரை, அந்தப் பெண் துணிச்சலாக எதிர்கொண்டு கையை முறுக்கி அலறவிட்ட சம்பவம் சமூக ஊடகங்களில் காட்டுத்தீயாகப் பரவி, பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வரும் அந்த வீடியோ பதிவின்படி, ஓடும் பேருந்து ஒன்றில் இருக்கையில் அமர்ந்திருந்த இளம்பெண்ணின் அருகில் ஒரு நபர் அமர்ந்துள்ளார். அந்த நபர், கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி, எதிர்பாராத விதமாகத் தொடுவது போ, அந்தப் பெண்ணிடம் தவறான முறையில் அத்துமீற முயன்றுள்ளார்.

முதலில் தற்செயலாக நடந்தது போல் தெரிந்தாலும், அந்த நபரின் தவறான எண்ணத்தை அடுத்த சில விநாடிகளிலேயே அந்த இளம்பெண் புரிந்து கொண்டார். இதனால் சற்றும் பயப்படாமல், உடனடியாகச் செயல்பட்ட அந்தப் பெண், தன்னைத் தொட முயன்ற அந்த நபரின் கையைப் பிடித்து பலமாக முறுக்கினார். இளம்பெண்ணின் இந்தத் திடீர் மற்றும் ஆக்ரோஷமான தாக்குதலை அந்த நபர் சற்றும் எதிர்பார்க்கவில்லை. கையை முறுக்கிய வேகத்தில் அந்த நபர் வலியால் பேருந்துக்குள்ளேயே அலறத் தொடங்கினார். இதைப் பார்த்த அருகில் இருந்த பயணிகள் அனைவரும் ஒரு நிமிடம் அதிர்ச்சியில் உறைந்தனர்.

சம்பவத்தின் பின்னணியை அறிந்ததும், அங்கிருந்த சக பயணிகள் பலரும் அந்தப் பெண்ணின் துணிச்சலான செயலைப் பாராட்டி, அவருக்கு ஆதரவாக நின்றனர். இந்த ஒட்டுமொத்த சம்பவமும் வீடியோவாகப் பதிவாகி, தற்போது இணையதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. இந்த வீடியோவைப் பார்த்த சமூக ஊடகப் பயனர்கள், அந்தப் பெண்ணின் தைரியத்தையும், சமயோசித புத்தியையும் பாராட்டி கருத்துகளைக் குவித்து வருகின்றனர். “தவறு செய்பவர்களுக்கு இதுதான் சரியான தண்டனை”, “அமைதியாக இருக்காமல் உடனடியாகப் பதிலடி கொடுத்த பெண்ணின் தைரியத்திற்குப் பாராட்டுகள்” என்று பலரும் பதிவிட்டு வருகின்றனர்.

பொதுப் போக்குவரத்தில் பெண்களின் பாதுகாப்பு குறித்து இந்தச் சம்பவம் மீண்டும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. இதுபோன்ற அத்துமீறல்களின் போது பெண்கள் மௌனமாக இருக்காமல், உடனடியாகக் குரல் கொடுத்துப் பதிலடி கொடுத்தால் மட்டுமே, தவறு செய்ய நினைப்பவர்களுக்கு அது ஒரு அச்சத்தை ஏற்படுத்தும் என்று சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.