மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூர் மாவட்டத்தில், அரசின் புதிய மதுபானக் கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, பெண்கள் மற்றும் சிறுவர்கள் அடங்கிய கும்பல் ஒன்று புதிதாகத் திறக்கப்பட்ட மதுக்கடையை அடித்து நொறுக்கி, மதுபாட்டில்களைக் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
அதாவது தாம்டா கிராமத்தில் உள்ள பர்னு திராஹா பகுதியில், கலால் துறை சார்பில் புதிய மதுபானக் கடை ஒன்று அண்மையில் திறக்கப்பட்டது. ஞாயிற்றுக்கிழமையன்று இக்கடையின் முன்பாக அப்பகுதியைச் சேர்ந்த பெண்கள், இளைஞர்கள் மற்றும் சிறுவர்கள் பெருமளவில் திரண்டனர்.
ஆரம்பத்தில் சில சிறுவர்கள் கடையின் முன்பு நடனமாடிக் கொண்டிருந்ததால், அங்கு என்ன நடக்கப் போகிறது என்பதை யாரும் கணிக்கவில்லை. ஆனால், சில நிமிடங்களிலேயே அந்தக் கூட்டம் வன்முறையாக மாறியது. கைகளில் தடிகளுடனும், கற்களுடனும் திரண்ட பெண்கள் திடீரென மதுக்கடைக்குள் புகுந்து, அங்கிருந்த கவுண்ட்டர்கள் மற்றும் அலமாரிகளை அடித்து நொறுக்கினர். மேலும், அங்கிருந்த மதுபாட்டில்களையும் அள்ளிச் சென்றனர்.
இதுகுறித்து மதுக்கடை மேலாளர் சந்தோஷ் ஜெய்ஸ்வால் கோசல்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அவர் அளித்துள்ள புகாரில், “மதுக்கடைக்குள் புகுந்த கும்பல் கடையைச் சேதப்படுத்தியதோடு, கவுண்ட்டரில் வைக்கப்பட்டிருந்த ரொக்கப் பணத்தையும், லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள மதுபாட்டில்களையும் கொள்ளையடித்துச் சென்றுள்ளது” எனக் குறிப்பிட்டுள்ளார். இந்த வன்முறைச் சம்பவங்கள் அனைத்தும் கடையில் இருந்த சிசிடிவி கேமராக்களில் பதிவாகியுள்ளன.
இச்சம்பவம் குறித்து அப்பகுதி பெண்கள் தரப்பில் கூறப்படுவதாவது, “பெண்கள், மாணவிகள் மற்றும் பள்ளிச் சிறுவர்கள் தினமும் பயன்படுத்தும் முக்கியப் பாதையிலேயே இந்த மதுக்கடை திறக்கப்பட்டுள்ளது. இதனால் இப்பகுதியில் குடிகாரர்களின் நடமாட்டம் அதிகரித்து, பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லாத சூழல் உருவாகியுள்ளது. இதுகுறித்து காவல்துறை மற்றும் கலால் துறையினரிடம் பலமுறை மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் தான் இந்த போராட்டம் வெடித்தது” என்றனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட ராஜ்குமாரி பாய் என்ற பெண் கூறுகையில், “இந்தக் கடைக்கு மீண்டும் மதுபானங்கள் கொண்டு வரப்பட்டால், பெண்கள் மீண்டும் தொடர் போராட்டத்தில் ஈடுபடுவோம்” என எச்சரித்தார். மற்றொரு பெண்ணான ராம்பியாரி பாய் கூறுகையில், “எனது கணவர் தினமும் குடித்துவிட்டு வந்து என்னை அடிக்கிறார். குடிக்கப் பணம் இல்லாதபோது வீட்டின் பொருட்களையும் விற்றுவிடுகிறார். எங்களைப் போன்ற ஏழைக் குடும்பங்களைக் கெடுக்கும் இந்த மதுக்கடை எங்களுக்குத் தேவையில்லை எனத் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.
#WATCH | Group Of Women, Children Vandalise And Loot Liquor Shop In Jabalpur To Protest Its Opening #MPNews #MadhyaPradesh pic.twitter.com/UomyAnwD27
— Free Press Madhya Pradesh (@FreePressMP) May 17, 2026
சம்பவம் குறித்துத் தகவல் அறிந்ததும் போலீசாரும், கலால் துறை அதிகாரிகளும் விரைந்து வந்தனர். ஆனால் அதற்குள் அங்கிருந்தவர்கள் கலைந்து சென்றனர். இச்சம்பவம் தொடர்பாக அடையாளம் தெரியாத நபர்கள் மீது வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் வன்முறையில் ஈடுபட்டவர்களை அடையாளம் காணும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இச்சம்பவம் மத்தியப் பிரதேசத்தில் குடியிருப்புப் பகுதிகளுக்கு அருகில் மதுக்கடைகள் திறக்கப்படுவதற்கு எதிராக பொதுமக்களிடையே நிலவி வரும் கடும் எதிர்ப்பை மீண்டும் வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளது.
