இந்தூரில் ரயில் தண்டவாளத்தில் நின்றுகொண்டிருக்க, அதிலிருந்து இறங்கிய ரயில்வே ஊழியர் ஒருவர் சாலையோரக் கடையில் சமோசா வாங்கும் வீடியோ இணையத்தில் தீயாய் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது. லோகோ பைலட் சமோசா சாப்பிடுவதற்காகத்தான் ரயிலையே நடுவழியில் நிறுத்தினார் என்றும், அது ஒரு பயணிகள் ரயில் என்றும் சமூக வலைதளங்களில் பலரும் வதந்திகளைப் பரப்பி வந்தனர். இந்நிலையில், இந்த வைரல் வீடியோ முற்றிலும் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டு, தவறான தகவல்களுடன் பரப்பப்பட்டு வருவதாக மேற்கு ரயில்வே நிர்வாகம் அதிரடி விளக்கம் அளித்துள்ளது.

 

உண்மையில், அந்தப் பகுதியில் நடைபெற்று வந்த ரயில்வே பொறியியல் பராமரிப்புப் பணிகள் காரணமாக, ‘கான்கார் கிரீன் ஃபீல்டு பிரைவேட் டெர்மினஸ்’ என்ற சரக்கு ரயில் ராவ் ஹோம் சிக்னல் அருகே ஏற்கனவே நிறுத்தப்பட்டிருந்தது. அப்படி அங்கீகரிக்கப்பட்ட காரணத்திற்காக ரயில் நிறுத்தப்பட்டிருந்த நேரத்தில், அங்குள்ள உதவி லோகோ பைலட் தனது சொந்த தேவைக்காக கீழே இறங்கி சமோசா வாங்கியுள்ளார். இதைத்தான் ரயிலை நிறுத்தி சமோசா வாங்கியதாக தவறாக சித்தரித்துள்ளனர். எனவே, பயணிகள் ரயிலுக்கும் இந்த சம்பவத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும், உண்மைத்தன்மையை ஆராயாமல் இதுபோன்ற வதந்திகளைப் பொதுமக்கள் நம்பவோ, பகிரவோ வேண்டாம் என்றும் மேற்கு ரயில்வே கேட்டுக்கொண்டுள்ளது.