ஜார்க்கண்ட் மாநிலம் தன்பாத் மாவட்டத்தில் உள்ள திலையதான் கிராமத்தை சேர்ந்த சுரேஷ் ஹன்ஸ்தா என்பவரை அவரது மனைவி சுர்ஜி மஜியைன் (42) கொலை செய்து, பிணத்தை வீட்டிற்குள் புதைத்து வைத்திருக்கிறார். சுமார் 10 நாட்களுக்கு மேல் பிணம் வீட்டிற்குள் புதைந்த நிலையில் இருந்தது. சுரேஷின் உறவினர்கள் மற்றும் அக்கம்பக்கத்தினர் சந்தேகம் அடைந்து காவல்துறையிடம் புகார் அளித்ததால் இந்தக் கொலை வெளிச்சத்திற்கு வந்தது.
இதுகுறித்து மேற்கொண்ட விசாரணையில் சுரேஷ் தினமும் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்து டார்ச்சர் செய்ததாகவும், மற்ற பெண்களுடன் தொடர்பு வைத்திருந்ததாகவும், இதனால் ஏற்பட்ட மன உளைச்சலால் அவரை கட்டை மற்றும் அரிவாளால் தாக்கி கொலை செய்ததாகவும் சுர்ஜி காவல்துறையிடம் ஒப்புக்கொண்டார். முதலில் அவர் பல்வேறு பொய்க் காரணங்களைச் சொல்லி மறைக்க முயன்றார், ஆனால் உறவினர்கள் சந்தேகத்தால் காவல்துறை விசாரணை மேற்கொண்டு, அவரை கைது செய்தது.
காவல்துறை அதிகாரி உமாசங்கர், சுரேஷின் உடலை வீட்டிலிருந்து தோண்டி எடுத்து, பிரேத பரிசோதனைக்காக ஷஹீத் நிர்மல் மஹ்தோ மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு அனுப்பப்படும் என்று தெரிவித்தார். மாவட்ட நிர்வாகத்தின் மாஜிஸ்திரேட் அனுமதியுடன் உடல் வெளியே எடுக்கப்படும். கொலைக்கு பயன்படுத்தப்பட்ட கட்டை மற்றும் அரிவாளை கண்டுபிடிக்க காவல்துறை முயற்சி செய்கிறது. சுரேஷின் உறவினர்கள், அவரது மாமாவின் இறுதிச் சடங்கிற்கு சுரேஷ் வராதது மற்றும் வீட்டில் இருந்து வந்த துர்நாற்றம் ஆகியவை சந்தேகத்தை ஏற்படுத்தியதாகக் கூறினர். தற்போது காவல்துறை இந்த வழக்கை ஆழமாக விசாரித்து வருகிறது.
