நெல்லை மாவட்டம் வள்ளியூரில் காதலர் தினத்தை முன்னிட்டு டீக்கடை உரிமையாளர் ஒருவர் அறிவித்துள்ள ஒரு ரூபாய் ‘டீ’ சலுகை பொதுமக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. வள்ளியூரைச் சேர்ந்த ஜெயக்குமார் என்பவர், தனது கடையில் பிப்ரவரி 13 முதல் 15 வரை தொடர்ந்து மூன்று நாட்களுக்கு இந்த அதிரடிச் சலுகையை அறிவித்துள்ளார்.

மேலும் காதலை வெறும் வணிகமாகப் பார்க்காமல், சமூகத்தில் அன்பையும் மகிழ்ச்சியையும் பகிரும் ஒரு வாய்ப்பாக மாற்ற வேண்டும் என்ற நோக்கில் சுத்தமான பசும்பால் மற்றும் இஞ்சி கலந்த தரமான டீயை அவர் வழங்கி வருகிறார். இவரது இந்த அறிவிப்பு பள்ளி, கல்லூரி மாணவர்கள் மட்டுமின்றி வெளியூர் பயணிகளையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

இந்த முன்னெடுப்பு குறித்துப் பேசிய ஜெயக்குமார், “காதல் என்பது வெறும் வயதினருக்கோ அல்லது இளைஞர்களுக்கோ மட்டும் உரித்தானது அல்ல; அது 20 முதல் 80 வயது வரை உள்ள அனைத்து தரப்பினருக்குமானது” என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

இந்நிலையில் முதல் நாளில் 150 வாடிக்கையாளர்களாகத் தொடங்கி, இரண்டாம் நாளில் 300-க்கும் மேற்பட்டோர் இவரிடம் ஒரு ரூபாய்க்கு டீ அருந்திச் சென்றுள்ளனர். லாப நோக்கத்தைத் தாண்டி, மனித நேயத்துடனும் அன்பின் புனிதத்தைப் போற்றும் வகையிலும் செயல்பட்டு வரும் ஜெயக்குமாரின் இந்த முயற்சிக்குச் சமூக வலைதளங்களில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.