டி20 உலகக் கோப்பை சூப்பர்-8 சுற்றில் இங்கிலாந்திடம் தோல்வியடைந்து பாகிஸ்தான் அணி வெளியேறும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ள சூழலில், அந்த அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஷாகின் அப்ரிடி அளித்துள்ள பேட்டி அணியினுள் இருக்கும் மோதல்களை வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது.

இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் 164 ரன்கள் மட்டுமே எடுத்தது தோல்விக்கு முக்கியக் காரணமாகப் பார்க்கப்படுகிறது. இது குறித்துப் பேசிய ஷாகின் அப்ரிடி, மறைமுகமாக பாபர் அசாமைச் சாடினார். “டி20 கிரிக்கெட்டில் வெறும் விக்கெட்டை மட்டும் தக்கவைத்துக் கொள்வது போதாது. ஓவருக்கு 8 ரன்கள் என்ற விகிதத்தில் ரன் சேர்த்தால் மட்டுமே வெற்றி பெற முடியும். பார்ட்னர்ஷிப் என்பது பவுண்டரிகளையும் அடிக்க வேண்டும், அதே சமயம் சிங்கிள் ரன்களையும் எடுக்க வேண்டும்,” என்றார். இப்போட்டியில் பாபர் அசாம் 24 பந்துகளில் 25 ரன்கள் மட்டுமே எடுத்து மந்தமாக விளையாடியது குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தான் அணியில் அளவுக்கு அதிகமாக ஆல்-ரவுண்டர்கள் சேர்க்கப்பட்டது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இது பயிற்சியாளர் மைக் ஹெசனின் திட்டமா என்று கேட்டதற்கு, “அதைப் பற்றி நான் கருத்து சொல்ல விரும்பவில்லை” என்று அப்ரிடி பதிலளித்தார். அவரது இந்த மௌனம், அணித் தேர்வில் வீரர்களிடையே உடன்பாடு இல்லை என்பதைக் காட்டுவதாகக் கிரிக்கெட் விமர்சகர்கள் கருதுகின்றனர்.

தனது பந்துவீச்சு குறித்துப் பேசிய அவர், “அணியில் இருந்து என்னை நீக்கினாலும் கவலையில்லை. நான் விளையாடும் வரை முதல் ஓவரிலேயே விக்கெட் எடுத்து எதிரணியை நிலைகுலையச் செய்வதே என் வேலை. இதற்காக நான் யாருக்கும் எதையும் நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை; எனக்கு நானே உண்மையாக இருந்தால் போதும்” என்று ஆவேசமாகத் தெரிவித்தார். இப்போட்டியில் அப்ரிடி 30 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பாகிஸ்தான் அணி தொடரில் இருந்து வெளியேறும் விளிம்பில் இருக்கும் நிலையில், மூத்த வீரர்களுக்கிடையேயான இந்த வார்த்தைப் போர் அந்த நாட்டு ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.